மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 16 பிப் 2019

பாதியில் நின்ற ’வந்தே பாரத்’ ரயில்!

பாதியில் நின்ற ’வந்தே பாரத்’ ரயில்!

பிரதமர் நரேந்திர மோடி நேற்று கொடியசைத்துத் தொடங்கிவைத்த வந்தே பாரத் அதிவேக ரயில் ஒரே நாளில் பாதியில் நின்றது.

வந்தே பாரத் என்று பெயர் சூட்டப்பட்ட ட்ரெயின் 18 ரயில் சேவையை நேற்று (பிப்ரவரி 15) பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்துத் தொடங்கிவைத்தார். பழைய சதாப்தி எக்ஸ்பிரஸ்களுக்கு மாற்றாக, பயண நேரத்தைக் குறைக்கும் விதமாக மணிக்கு 160 கிலோ மீட்டர் செல்லக்கூடியதாகவும், பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய ரயிலாகவும் இது உருவாக்கப்பட்டது. டெல்லியிலிருந்து வாரனாசிக்கு சுமார் 820 கிலோ மீட்டர் தொலைவை இந்த ரயில் 9.45 மணி நேரத்தில் கடக்கும். இந்த ரயிலில் உள்ள 16 பெட்டிகளும் குளிர்சாதன பெட்டிகள் மட்டுமே. 1,128 பேர் பயணிக்கலாம். சென்னை ஐசிஎஃப் ஆலையில் இந்த ரயில் தயாரிக்கப்பட்டது.

இதன் சேவையை நேற்று பிரதமர் தொடங்கி வைத்த நிலையில், இன்று ரயில் பழுதடைந்து நின்றுவிட்டது. டெல்லியில் இருந்து வாரனாசிக்கு சென்ற ரயில் அங்கிருந்த மீண்டும் நேற்று இரவு டெல்லி திரும்பியுள்ளது. அப்போது டெல்லியிலிருந்து சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள டுண்ட்லா எனும் இடத்திற்கு வந்தபோது ரயில் பழுதடைந்து நின்றது. ரயிலை 40 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. ரயில் பெட்டிகளுக்கு மின்சாரம் செல்வதும் தடைபட்டது. இதையடுத்து 10 கிலோ மீட்டர் வேகத்தில் ரயிலை இயக்கி சம்ரோலா என்ற ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்தியுள்ளனர்.

பயணிகள் வேறு 2 ரயில்களில் பாதுகாப்பாக டெல்லிக்கு அனுப்பப்பட்டனர். வந்தே பாரத் ரயில் தனது வர்த்தக ரீதியான பயணத்தை நாளை தொடங்கும் நிலையில், அதற்கான முன்பதிவில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத்தீர்ந்துவிட்டன. இந்த நிலையில் வந்தே பாரத் ரயில் இயக்கப்படுமா அல்லது சேவை ரத்து செய்யப்படுமா என்பது புதிராக உள்ளது. இருப்பினும் கோளாறு சரிசெய்யப்பட்டு நாளை முதல் தனது வழக்கமான சேவையைத் தொடங்கும் என ரயில்வே அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

சனி, 16 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon