மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 16 பிப் 2019

பணிந்தது ஆஸ்கர்!

பணிந்தது ஆஸ்கர்!

2019ஆம் வருட ஆஸ்கர் நிகழ்ச்சி இன்னும் எத்தனை சுவாரசியங்களை மக்களுக்குத் தரப்போகிறது என்று தெரியவில்லை. சில வாரங்களுக்கு முன்பு, ஆஸ்கரின் மிக முக்கியமான விருதுகளாகக் கருதப்படும் சிறந்த ஒளிப்பதிவு, எடிட்டிங், லைவ் ஆக்‌ஷன் குறும்படம் மற்றும் மேக்கப்& ஹேர்ஸ்டைல் ஆகியவற்றை தொலைக்காட்சிகளிலும், இணைதளம் மூலம் ஒளிபரப்பப்படும் தளங்களிலும் நீக்கிவிடுவதாக அறிவித்தது ஆஸ்கர் அமைப்பு.

நீண்ட நெடிய மூன்று மணி நேரங்களை ஆஸ்கர் எடுத்துக்கொள்வதால், முடிந்தளவுக்கு அவற்றின் நீளத்தைக் குறைக்க எடுக்கப்பட்ட முயற்சியாக இது குறித்த அறிவிப்பில் குறிப்பிட்டார், ஆஸ்கரின் பிரெசிடெண்ட் டாம் பெய்ல்.

‘மற்ற விருதுகளைவிட, இந்த விருதுகள் எந்த விதத்தில் தரம் குறைந்துவிட்டது?’ என்று ரசிகர்களும், திரையுலக ஆளுமைகள் பலரும் வரிந்துகட்டிக் கொண்டு களமிறங்கியதன் விளைவாக, தங்களது அறிவிப்பைத் திரும்பப் பெற்றுக்கொண்டது ஆஸ்கர்.

எந்த நான்கு துறைகளை நீக்கிவிடலாம் என ஆஸ்கர் முடிவெடுத்ததோ, அந்த நான்கு துறைகளை நம்பியே ஆஸ்கரின் அனைத்துவிதமான ஏற்பாடுகளும் இருக்கின்றன. ஆஸ்கர் நிகழ்ச்சியை கேமராவில் படம்பிடிக்க ஒளிப்பதிவாளர்கள் ஆயிரம் பேர் தேவை. ஆனால், அந்தத் துறைக்கான விருது கொடுக்கும்போது விளம்பர இடைவேளையை அறிவித்துவிடுவார்களாம்.

எண்ணற்ற கேமராக்களை வைத்து எடுக்கப்படும் ஆஸ்கர் நிகழ்ச்சியைத் திறம்படத் தொகுக்க எடிட்டர்கள் பலர் தேவை. ஆனால், அந்த விருதினைக் கொடுக்கும்போது ஆஸ்கருக்கு ஸ்பான்சர் செய்தவர்களின் விளம்பரங்களை மக்கள் பார்க்கவேண்டுமாம்.

நேரடியாய் ஆஸ்கர் அரங்கிலேயே நிற்கும் விதத்தில் நிகழ்ச்சியை உருவாக்க உதவி செய்தவர்களுக்கான விருது பெற்றவர் யார் என்பதை, விழா முடிந்தபிறகே உலகத்திலுள்ள மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பது எப்படி நியாயம்?

எங்கள் துறை சார்ந்த விருதுக்கு முக்கியத்துவம் கொடுக்காத ஆஸ்கர் விழாவுக்கு வரும் நடிகைகள், நடிகர்களுக்கு மேக்கப் மற்றும் ஹேர்ஸ்டைல் செய்யமாட்டோம் என அந்தக் கலைஞர்கள் சொல்லிவிட்டால், ‘ஆத்தா சத்தியமா நான் தான் ஆஸ்கர் நாமினேட் பண்ண ஹீரோயின்/ஹீரோ’ என்று வாசலில் நின்று திரைக்கலைஞர்கள் சண்டைபோடும் நிலை வந்துவிடுமே என்ன செய்யப்போகிறாய் ஆஸ்கர் சிலையே? என்றெல்லாம் பலவிதமாய் ரசிகர்கள் கொடுத்த அழுத்தமே, ஆஸ்கர் அமைப்பை தற்போது பணிய வைத்திருக்கிறது.

சனி, 16 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon