மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 16 பிப் 2019

கபடியை விடாத சுசீந்திரன்

கபடியை விடாத சுசீந்திரன்

விளையாட்டுப் போட்டிகளை மையமாகக் கொண்டு திரைப்படங்களை உருவாக்கிவரும் சுசீந்திரன் மீண்டும் கபடியைக் கதைக்களமாகக் கொண்டு புதிய படத்தை இயக்கிவருகிறார்.

‘கென்னடி கிளப்' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. சசிகுமார், பாரதிராஜா ஆகியோர் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சூரி, முனீஸ்காந்த், மீனாட்சி, காயத்ரி, நீது, சுமித்ரா, சௌந்தர்யா உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

சுசீந்திரனின் குடும்பமும் கபடி பின்னணியைக் கொண்டது. அவரது அப்பா கபடி பயிற்சியாளராக இருந்துள்ளார். வெண்ணிலா கபடிக் குழு என்ற முதல் படத்திலேயே கபடிப் போட்டியில் பங்கேற்கும் கிராமத்து வீரர்களை மையமாகக் கொண்டு திரைக்கதை அமைத்திருந்தார். அப்படம் ரசிகர்களிடையேயும், விமர்சனரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தற்போது அவர் கென்னடி கிளப் படத்தை பெண்கள் கபடியை மையமாகக் கொண்டு உருவாக்கிவருகிறார். நடிகர், நடிகைகளோடு கபடி வீராங்கனைகளும் இப்படத்தில் நடிக்கின்றனர்.

பாண்டிய நாடு, பாயும் புலி மற்றும் மாவீரன் கிட்டு உள்ளிட்ட படங்களுக்கு பிறகு சுசீந்திரன் இயக்கும் இந்தப் படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார். நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தாய் சரவணன் தயாரிக்கிறார்.

சனி, 16 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon