மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 16 பிப் 2019

நாராயணசாமி 4ஆவது நாளாக தர்ணா!

நாராயணசாமி 4ஆவது நாளாக தர்ணா!

துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராகப் புதுச்சேரி முதல்வர் நாராயண சாமி இரவு பகலாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவரது போராட்டம் இன்றுடன் நான்காவது நாளை எட்டியுள்ளது.

ஆளுநர் கிரண்பேடி அரசின் நலத்திட்ட உதவிகளுக்கு அனுமதி மறுக்கிறார். தன்னிச்சையாகச் செயல்படுகிறார் என குற்றம்சாட்டி ஆளுநர் மாளிகை முன் முதல்வர் நாராயணசாமி தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார். போராட்டத்தில் ஈடுபட்ட அமைச்சர்கள் எம்.எல்.ஏ.க்கள் மட்டும் அவரவர் வீடுகளுக்குச் சென்று வரும் நிலையில் கடந்த நான்கு நாட்களாக வீட்டுக்குச் செல்லாமல் இரவு பகலாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் நாராயணசாமி.

இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு திமுக எம்.எல்.ஏ சிவா சார்பில் உணவு வழங்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து அமைச்சர்கள் சார்பில் இன்று மதியம் அசைவ உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. தொடர் போராட்டத்தில் ஈடுபட்டாலும் தொய்வு ஏற்படாத வகையில் அரசுப் பணிகளை முதல்வர் கவனித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று, ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், “பிரதமர், குடியரசுத் தலைவர், உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு இங்குள்ள சூழல் குறித்து கடிதம் எழுதியுள்ளேன். காந்திய வழியில் அமைச்சர்களும், நானும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். மக்கள் நலத் திட்டங்களை கிரண்பேடி தடுத்து நிறுத்துகிறார். வளர்ச்சித் திட்டங்களுக்கு முட்டுக் கட்டைப் போடுகிறார். உடனடியாக தற்காலிக ஆளுநரை நியமித்து கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்கவேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையே போராட்டத்தை தீவிரப்படுத்தவுள்ளதாகவும், டெல்லி சென்ற கிரண் பேடி 20ஆம் தேதி புதுச்சேரி திரும்பவுள்ள நிலையில், 21ஆம் தேதி அவரைச் சந்திக்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் கூறப்படுகிறது.

சனி, 16 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon