மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 16 பிப் 2019

ஆரியின் ஏலியன் படம்: போஸ்டரை வெளியிட்ட விஷ்ணு

ஆரியின் ஏலியன் படம்: போஸ்டரை வெளியிட்ட விஷ்ணு

நடிகர் ஆரியின் ‘எல்லாம் மேல இருக்கவன் பாத்துப்பான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஷ்ணு விஷால் வெளியிட்டுள்ளார்.

நடிகர் ஆரியின் அடுத்த படத்திற்கு ‘எல்லாம் மேல இருக்கவன் பாத்துப்பான்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. நடிகர் விஜய்காந்தின் பல படங்களை தயாரித்து அவரது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தரின் ‘ராவுத்தர் மூவீஸ்’ நிறுவனம் நீண்டகாலத்திற்கு பிறகு தற்போது இப்படத்தை தயாரித்து வருகிறது. இப்படத்தை புதுமுக இயக்குநரான கவிராஜ் இயக்குகிறார். இதில் ஆரிக்கு ஜோடியாக நடிகை சாஷ்வி பாலா நடிக்கிறார். மேலும், மொட்ட ராஜேந்திரன், பகவதி பெருமாள், மறைந்த நடிகர் நாகேஷின் பேரன் பிஜேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு இசையமைப்பாளராக கார்த்திக் ஆச்சாரியா நியமிக்கப்பட்டுள்ளார். ஒளிப்பதிவு பணிகளை லக்ஷ்மனும், படத்தொகுப்பு பணிகளை ரவிச்சந்திரனும் கையாளவுள்ளனர். இப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஷ்ணு விஷால் வெளியிட்டுள்ளார். இப்படத்தை மறைந்த தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தரின் மகன் முகமது அபுபக்கர் தயாரித்து வருகிறார். விண்வெளி, விண்கலன்கள், ஏலியென்கள் என விண்வெளியை மையமாக வைத்து இந்தப் படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சனி, 16 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon