மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 16 பிப் 2019

புல்வாமா படுகொலை: வருந்தும் அதில் அகமது தந்தை!

புல்வாமா படுகொலை: வருந்தும் அதில் அகமது தந்தை!

தீர்க்கப்படாத பிரச்சினைகள்தான் இருதரப்பிலும் இரத்தக்களரி ஏற்படுவதற்குக் காரணமாக உள்ளதாகவும், காஷ்மீர் பிரச்சினை உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டுமென்றும் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்திய அதில் அகமதுவின் தந்தை கூறியுள்ளார்.

பிப்ரவரி 14ஆம் தேதி தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோராவில் நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலால் 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிர் துறந்தனர். இந்த சம்பவத்துக்கு பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பொறுப்பேற்றது. அந்த அமைப்பைச் சேர்ந்த காஷ்மீர் இளைஞர் அதில் அகமது (20) இந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் ஈடுபட்டார்.

40க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்துள்ள சம்பவத்தால் அவர்களின் குடும்பத்தினருக்கு ஏற்பட்டுள்ள இழப்பை எண்ணி வருத்தமடைவதாக அதில் அகமதுவின் தந்தை குலாம் ஹாசன் தார் தெரிவித்துள்ளார். தி எகனாமிக் டைம்ஸ் ஊடகத்திடம் இதுகுறித்து அவர் பேசுகையில், “தீர்க்கப்படாத காஷ்மீர் பிரச்சினைகள்தான் இருதரப்பிலும் ரத்தக்களரி ஏற்படுவதற்குக் காரணமாக உள்ளது. அரசியல்வாதிகள்தான் இவை எல்லாவற்றுக்கும் காரணம். அவர்கள் தங்கள் குடும்பத்துக்கு எந்தத் தீங்கும் வரவில்லை என்பதால் எதுவும் செய்ய மாட்டார்கள். இறுதியில் இப்போது இருதரப்புக்கும் இழப்பு ஏற்பட்டுள்ளது. காஷ்மீர் போன்ற இடத்தில், என் மகன் ஆயுதம் எடுத்த நாளிலிருந்து மரணம் என்பது தடுக்க முடியாதது” என்றார்.

மேலும், “அதில் அகமது மிகவும் கூச்ச சுபாவமுடையவன். ஆனால் கடினமாக உழைப்பவன். குடும்ப வேலைகளுக்கு உதவுபவன். இந்திய கிரிக்கெட் அணியின் ரசிகன். தோனியை மிகவும் பிடிக்கும். 2016ஆம் ஆண்டு ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குண்டடி பட்டு ஓராண்டு வரை படுக்கையில் இருந்தான். உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் உடல்கள் அவர்களுடைய குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. ஆனால் அரசியல்வாதிகள் இதற்காகக் கவலைப்படுகிறார்களா? அவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கிவிட்டார்கள். ஆனால் காஷ்மீரின் உண்மையான பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது” என்றார்.

இந்த கொலைகள் எல்லாம் எனக்கு மகிழ்ச்சியாக இல்லை என்று கூறிய அதில் அகமதுவின் தந்தை, “இந்த சம்பவத்துக்காக இந்தியா முழுவதும் கிளர்ந்தெழுகிறது. ஆனால் காஷ்மீரில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் உயிர்த்தியாகம் செய்கிறார்கள். நூற்றுக்கணக்கான மனித உயிர்கள் கொல்லப்படுகின்றனர். ஏன் ஒருவரும் கவலைப்படவில்லை?” என்று கேட்கிறார்.

அதில் அகமது தனது நண்பர் மற்றும் உறவினரான சமீர் என்ற கல்லூரி மாணவருடன் கடந்த ஆண்டு மார்ச் 19ஆம் தேதி காணாமல் போய்விட்டார். சமீர் காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் படித்து வந்தவர். காணாமல் போன தனது மகனைக் கண்டுபிடித்து தருமாறு அதில் அகமதுவின் குடும்பத்தார் கடந்த ஆண்டு மார்ச் 23ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் அவர் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது அமைப்பில் இணைந்துவிட்டதாக ஒரு மாதத்திற்குப் பிறகு சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வெளியான பிறகே அவரது குடும்பத்துக்கு உண்மை தெரிய வந்துள்ளது.

இவருடன் இணைந்த சமீர் இன்னமும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பில் இயங்கிக் கொண்டிருக்கிறார். அதில் அகமதுவின் தந்தையின் உறவினர் மகன் மன்சூர் அகமது தார் (21) 2016ஆம் ஆண்டு கொல்லப்பட்டுள்ளார். இவர் லஷ்கர் இ தொய்பாவுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்பட்டது. அதில் அகமதுவின் மற்றொரு குடும்ப உறவினரான தவ்ஷீப் என்பவர் தீவிரவாதத் தொடர்பில் இருந்ததாகக் கூறி ஜம்முவில் உள்ள காட் பால்வால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சனி, 16 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon