மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 16 பிப் 2019

ஒரு கப் காபி!

ஒரு கப் காபி!

இன்று புதிதாய் பிறந்திடுவோம்!

ஒவ்வொரு விடியலும் புதிதாக ஏதோ ஒன்றைத் தருகிறது. நமக்குள் ஒருவித புத்துணர்ச்சியை உருவாக்குகிறது. இன்று புதிதாய் பிறந்தோம் என்று எண்ணும்போதே, மனம் பரவசத்தில் மூழ்குகிறது.

ஒரே அலுவலகத்தில் காவியா, சிந்து இருவரும் பணிபுரிந்து வந்தனர். எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பது சிந்துவின் குணம். அதற்கு நேர் மாறாக இருப்பவள் காவியா. இருவரும் ஒரே விடுதியில்தான் தங்கியிருந்தனர்.

எப்போதும் எதையாவது நினைத்துக் கவலைப்பட்டுக்கொண்டே இருப்பாள் காவியா. அந்த குணத்தை அடியோடு மாற்ற நினைத்தாள் சிந்து. ஒருநாள் தனது கையில் ஒரு கல்லை எடுத்து வைத்துக்கொண்டாள். காவியாவிடம் தனது கையை நீட்டி, இந்தக் கல்லை என் கையில் வைத்திருந்தால் என்ன ஆகும் என்று கேட்டாள். காவியாவுக்கு ஒன்றும் புரியவில்லை. இதனால் என்ன ஆகும், ஒன்றும் ஆகாது என்றாள்.

பின்னர், இன்னொரு கல்லை எடுத்துத் தன் கையில் வைத்துக்கொண்டாள் சிந்து. என் கையில் இரு கற்கள் உள்ளன, இப்போது என்ன ஆகும் என்று கேட்டாள். கூடுதல் சுமையாக இருக்கும் என்று எரிச்சலோடு பதில் சொன்னாள் காவியா. இதை ஒரு மணி நேரம் என் கையிலேயே தாங்கிப் பிடித்திருந்தால் என்னவாகும் என மீண்டும் சிந்து கேள்வி எழுப்பினாள். கையில் வலிதான் எடுக்கும் எனக் கோபமானாள் காவியா.

“ம்ம்ம்… கவனிச்சியா காவியா. இந்தக் கற்களால், எந்தப் பலனும் இல்லை. தேவையில்லாமல் இதனைக் கையில் வைத்திருப்பதால் எனக்குத்தான் வலி, தூக்கி எறிந்துவிட்டால் வலி இல்லை” என்றாள் சிந்து.

இந்தக் கற்களைச் சுமப்பது போலத்தான் நாம் பிரச்சினைகளைச் சுமந்துகொண்டு திரிகிறோம். அதனை மனதில் ஏந்திக்கொள்வதால் எந்த மாற்றமும் வரப்போவதில்லை. அதிலிருந்து விடுபடுவதற்கான வழியையோ அல்லது அந்த சுமையை மனதைவிட்டு அகற்றிவிட்டு வேறு வேலைகள் பார்ப்பதையோ மேற்கொண்டால் மட்டுமே நம் மனம் அமைதியில் திளைக்கும்.

காவியாவிடம் சிந்து இதனை விளக்கவில்லை. “அதனால கவலையெல்லாம் தூக்கிப் போட்டுவிட்டு இன்னிக்கு புதுசா பிறந்துட்டோம்னு நினைக்கத் தொடங்கு. எல்லாமே சரியாகிடும்” என்றாள். பாரதியாரைத் தனக்குப் பிடிக்கும் என்ற காவியாவுக்கு, அவர் எழுதிய ஒரு பாடலை நினைவூட்டினாள்.

''இன்று புதிதாய் பிறந்தோம் என்று நீவிர்

எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக்கொண்டு

தின்று விளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர்''

நடந்ததை நினைத்து வருந்துவதும், நடக்கப் போவதை எண்ணிக் கவலைப்படுவதும் தேவையற்றது. இன்று புதிதாய் பிறந்தோம் என்றிருப்பது, சுமைகளைக் குறைப்பதோடு, சுகங்கள் குறித்த புதிய எண்ணங்களையும் விதைக்கும். வாழ்க்கையை நம்பிக்கையோடு எதிர்கொள்ள உதவும்.

-கவிபிரியா

சனி, 16 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon