மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 25 மா 2019

நீலப் பொருளாதாரத்தைக் குறிவைக்கும் வெங்கையா நாயுடு

நீலப் பொருளாதாரத்தைக் குறிவைக்கும் வெங்கையா நாயுடு

கோவா தலைநகர் பனாஜியில் உள்ள தேசிய கடலியல் கழகத்தில் நேற்று (மார்ச் 24) நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “நீலப் பொருளாதாரத்தின் நோக்கமே நீண்ட கால அடிப்படையில் அனைவருக்குமான வளர்ச்சியையும், வேலைவாய்ப்புகளையும் கடல்சார் பொருளாதாரச் செயல்பாடுகளின் வாயிலாக பெறுவதே ஆகும். கடல் வளத்தை முறையே பயன்படுத்துவதற்கு உரிய திட்டங்கள் தொடங்கப்பட வேண்டும்.

இந்தியா தனது எண்ணெய் மற்றும் எரிவாயு தேவைகளில் பெரும்பகுதியை இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்துகொள்கிறது. கடல் ஆற்றல் மற்றும் கடல்சார் ஆற்றலில் நமது ஆராய்ச்சியை மேம்படுத்த வேண்டும். கடல்சார்ந்த காற்று, அலை போன்ற ஆற்றல்களைப் பயன்படுத்த விஞ்ஞானிகள் ஆய்வு நடத்த வேண்டும்.

ஆழ்கடல் மீன்பிடித்தல், நீர்மூழ்கி வாகனங்கள், நீர்மூழ்கி ரோபோக்கள் போன்ற தொழில்நுட்பங்களை மேம்படுத்த வேண்டும். கனிம வளங்களை எடுக்க நீர்மூழ்கி ரோபோக்களைப் பயன்படுத்த வேண்டும். கடலிலிருந்து மருந்துகளைத் தயாரிக்க தேசிய கடலியல் கழகம் ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும். நீல வளர்ச்சியை நோக்கி செல்லும் பாதையில் கடல் மற்றும் கடற்சூழல் அழிக்கப்படாமல் இருப்பதை அனைவரும் உறுதி செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.

திங்கள், 25 மா 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon