மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 26 செப் 2020

கிச்சன் கீர்த்தனா: ஓட்ஸ் கிச்சடி!

கிச்சன் கீர்த்தனா: ஓட்ஸ் கிச்சடி!

டயட்டில் இருப்பவர்களுக்கு ஏற்ற சுவை உணவு

அரிசியும் பருப்பும் சேர்த்துச் சமைக்கப்படும் உணவான கிச்சடி என்பது இந்தியாவின் பழைமையான ஆயுர்வேத நூல்களில் மருந்தாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ‘ரவாபாத்’ என்றும் இதை அழைக்கிறார்கள். பல இன மக்களும், உணவுக் கலாச்சாரமும் கொண்ட இந்தியாவில், தேசிய உணவு என்று ஏதேனும் ஒன்றை மட்டும் அறிவிப்பது கடினமான காரியமே. இருந்தாலும், கிச்சடிக்கு அந்தத் தகுதி இருக்கும் என்று தோன்றுகிறது. அப்படிப்பட்ட கிச்சடியில் பல வகைகள். அவற்றில் ஒன்றுதான் இந்த, ஓட்ஸ் கிச்சடி

என்ன தேவை?

ஓட்ஸ் – ஒரு கப்

பாசிப் பருப்பு – அரை கப்

வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)

தக்காளி – ஒன்று (பொடியாக நறுக்கவும்)

பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்)

கேரட் – ஒன்று (சிறிய துண்டுகளாக்கவும்)

பீன்ஸ் – 5 (சிறிய துண்டுகளாக்கவும்)

மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை

நெய் – ஒரு டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

தண்ணீர் – 4 கப்

தாளிக்க:

கடுகு – கால் டீஸ்பூன்

பெருங்காய்த்தூள் – கால் டீஸ்பூன்

சீரகம் – ஒரு டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

தோல் சீவி, துருவிய இஞ்சி – ஒரு டீஸ்பூன்

அலங்கரிக்க:

நறுக்கிய கொத்தமல்லித் தழை – சிறிதளவு

எப்படிச் செய்வது?

பாசிப் பருப்பை 10 நிமிடங்கள் ஊறவைத்து தண்ணீரை வடிக்கவும். குக்கரில் நெய்விட்டு உருக்கி, தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைத் தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு கேரட், பீன்ஸ், மஞ்சள்தூள், உப்பு சேர்த்துச் சிறிது நேரம் வதக்கவும். அதனுடன் பாசிப் பருப்பு, ஓட்ஸ், தண்ணீர் சேர்த்துக் கிளறி, குக்கரை மூடி இரண்டு விசில்விட்டு இறக்கவும். குக்கரில் ஆவி அடங்கிய பிறகு திறந்து, கிச்சடியின் மேல் கொத்தமல்லித் தழை தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.

என்ன பலன்?

ஓட்ஸில் குளூட்டன் என்கிற பொருள், ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்காமல் கட்டுப்படுத்தி இதயத்துக்குச் சீரான ரத்த ஓட்டம் செல்வதை உறுதி செய்கிறது. இதயத் தசைகளை வலுப்படுத்துகிறது. டயட்டில் இருப்பவர்களுக்கு ஏற்ற கிச்சடி இது.

நேற்றைய ரெசிப்பி: தினை அரிசி உப்புமா

ஞாயிறு, 7 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது