மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 26 செப் 2020

வார்த்தைகளை மறப்போம்!

வார்த்தைகளை மறப்போம்!

ஒரு கப் காபி

சொல்லைவிடச் செயல்தான் முக்கியம் என்ற போதும் தொடர்ந்து இங்கு வார்த்தைக்கான முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டுக் கொண்டே உள்ளது. நாவினால் சுட்டவடு ஆறாது என வள்ளுவர் கூறுகிறார். ஆதியிலே வார்த்தை இருந்தது என்று விவிலியம் சொல்கிறது.

‘என்னைப் பார்த்து அப்படி கேட்டுவிட்டானே..?’ என்ற சொற்றொடரை ஏறக்குறைய அனைவரும் உபயோகித்திருப்போம். ‘என்னை பத்தி அவங்க அப்படி பேசுனத்துக்குப் பதிலா ரெண்டு அடிகூட அடிச்சுருக்கலாமே’ என்ற புலம்பலும் அடிக்கடி கேட்கக்கூடியதுதான். ஒரே ஒரு வார்த்தையால் குடும்பம் பிரிந்துபோன கதையும் ஏராளம் உள்ளன. என்ன பிரச்சினை என்பது மறந்துபோய் பேசிய வார்த்தைகள் மட்டுமே நினைவில் நின்றுவிடுகின்றன.

அடுத்திருப்பவரின் இதயத்தில் கத்தியைச் செருகும் வார்த்தையை எப்போதும் அனுமதிக்க முடியாது. இருப்பினும் அதற்கு முன்னும் பின்னும் அந்த நபர் செய்த நல்ல விஷயங்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை என்பது சற்று விவாதிக்கக்கூடியது. கோபத்தை வார்த்தைக்கு மொழிபெயர்க்கும்போது அது ஆவணமாகிப் போகிறது. அதுவே உறவுகளின் இணைப்புக்குத் தடைக் கல்லாக உட்கார்ந்துகொள்கிறது. மன்னிப்பு கோரி நிற்கும்போதும் வார்த்தைகளுக்கு மட்டும் அது சாதாரணமாகக் கிடைத்துவிடுவதில்லை.

செயல்களால் வார்த்தைகளை அழிப்பதுதானே நல் உறவுக்கான வாய்ப்பாக இருக்க முடியும். மொழி கண்டறியப்படுவதற்கு முன்னர் இந்தக் கோபத்தை மனிதன் எப்படி வரையறுத்திருப்பான்?

வார்த்தைகளைப் பயன்படுத்தும்போது மிக கவனமாகவும், வார்த்தைகளைக் காரணம் காட்டி உறவுகளை விலக்காமலும் இருந்துவிட்டால் வாழ்க்கை வசந்தமாகும்.

செவ்வாய், 9 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon