மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 19 செப் 2020

உயர்கல்வி நிறுவனங்களில் சென்னை ஐஐடிக்கு முதலிடம்!

உயர்கல்வி நிறுவனங்களில் சென்னை ஐஐடிக்கு முதலிடம்!

இந்திய உயர்கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலில் இந்த ஆண்டும் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. பல்கலைக்கழகங்களுக்கான பட்டியலில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் இடம்பிடித்துள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் 2016ஆம் ஆண்டு முதல் வெளியிட்டு வருகிறது. நிறுவனத்தின் கல்வி பயிற்சி, மாணவர்களின் கற்கும் திறன், ஆராய்ச்சிகள், தேர்வு முடிவுகள் மற்றும் உள்கட்டமைப்பு போன்ற அம்சங்களை ஆராய்ந்து இந்த தரவரிசைப் பட்டியலை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டு வருகிறது.

2019ஆம் ஆண்டுக்கான இந்தப் பட்டியல் நேற்று (ஏப்ரல் 8) வெளியிடப்பட்டது. அதில் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் உயர்கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. பெங்களூரு ஐஐஎஸ் 2ஆவது இடத்தையும், டெல்லி ஐஐடி 3ஆவது இடத்தையும் பிடித்துள்ளன. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் 7ஆவது இடத்தை பிடித்துள்ளது. இது ஒட்டுமொத்த தரவரிசைக்கான பட்டியலாகும்.

பல்கலைக்கழகங்கள், பொறியியல் கல்லூரிகள், மேலாண்மை நிறுவனங்கள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் என ஒவ்வொரு பிரிவிலும் இந்த தரவரிசைப் பட்டியல் தனித்தனியாகவும் வெளியிடப்படுகிறது. பல்கலைக்கழகங்களுக்கான பட்டியலில் பெங்களூரு ஐஐஎஸ் நிறுவனமும், பொறியியல் கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலில் சென்னை ஐஐடியும், மேலாண்மை நிறுவனங்களுக்கான பட்டியலில் பெங்களூரு ஐஐஎம் மற்றும் அகமதாபாத் ஐஐஎம்மும், மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலில் டெல்லி எய்ம்ஸ் மற்றும் சண்டிகர் பிஜிஐஎம்ஆர் கல்லூரியும் முதலிடம் பிடித்துள்ளன. அதேபோல கட்டடக் கலை நிறுவனங்களுக்கான பட்டியலில் காரக்பூர் ஐஐடி மற்றும் ரூர்க்கி ஐஐடியும், சட்டக் கல்வி நிறுவனங்களில் பெங்களூரு இந்தியப் பல்கலைக்கழகத்தின் தேசிய சட்ட பள்ளி மற்றும் டெல்லி தேசியப் பல்கலைக்கழகமும் முதலிடம் பிடித்துள்ளன.

டாப் 10 பல்கலைக்கழகங்கள்

1. பெங்களூரு ஐஐஎஸ்

2. டெல்லி ஜேஎன்யூ

3. பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம், வாரணாசி

4. ஹைதராபாத் பல்கலைக்கழகம்

5. கல்கத்தா பல்கலைக்கழகம்

6. ஜாதவ்பூர் பல்கலைக்கழகம், கொல்கத்தா

7. அண்ணா பல்கலைக்கழகம், சென்னை

8. அம்ரிதா விஸ்வ வித்யபீடம், கோவை

9. மணிப்பால் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேசன், மணிப்பால்

10. சாவித்ரிபாய் புலே புனே பல்கலைக்கழகம்

டாப் பொறியியல் கல்வி நிறுவனங்கள்

1. ஐஐடி சென்னை

2. ஐஐடி டெல்லி

3. ஐஐடி பாம்பே

4. ஐஐடி காரக்பூர்

5. ஐஐடி கான்பூர்

6. ஐஐடி ரூர்க்கி

7. ஐஐடி கவுகாத்தி

8. ஐஐடி ஹைதராபாத்

9. அண்ணா பல்கலைக்கழகம்

செவ்வாய், 9 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon