மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 15 ஆக 2020

திமுக கூட்டணிக்கு வெற்றி: டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு!

திமுக கூட்டணிக்கு வெற்றி: டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு!

மக்களவைத் தேர்தல் தொடர்பாக டைம்ஸ் நவ் ஊடகம் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவில், தமிழகத்தில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெறும் என்று கூறியுள்ளது.

இந்தியாவின் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நாளை மறுநாள் 20 மாநிலங்களில் நடைபெறவுள்ளது. இதனையடுத்து தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளை 10ஆம் தேதிக்கு மேல் வெளியிடத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இந்நிலையில் ஊடகங்களும், தனியார் அமைப்புகளும் யார் வெற்றி பெறுவார்கள் என்ற கருத்துக் கணிப்பை அதிக அளவில் வெளியிட்டுவருகின்றன.

டைம்ஸ் நவ் ஊடகம் நேற்று (ஏப்ரல் 8) வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் தமிழகத்தில் மொத்தமுள்ள 39 இடங்களில் திமுக - காங்கிரஸ் கூட்டணி 33 இடங்களில் வெற்றிபெறும் என்று குறிப்பிட்டுள்ளது. அதிமுக - பாஜக கூட்டணி 6 இடங்களில் வெற்றிபெறும் என்றும், மற்ற கட்சிகளுக்கு ஓர் இடம்கூடக் கிடைக்காது என்றும் கணித்துள்ளது. 2014 மக்களவைத் தேர்தலில் தற்போது அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் 39 இடங்களையும் கைப்பற்றின என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்கு சதவிகிதத்தைப் பொறுத்தவரை திமுக கூட்டணிக்கு 53.12 சதவிகிதமும், அதிமுக - பாஜக கூட்டணிக்கு 39.61 சதவிகிதமும் அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட இதர கட்சிகளுக்கு 7.27 சதவிகிதமும் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது. 2014 மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் பெற்ற வாக்கு சதவிகிதம் 62.8 ஆகவும், திமுக கூட்டணி 29.37 வாக்குகளையும் பெற்றுள்ளன.

மற்ற மாநிலங்களின் கருத்துக் கணிப்பு நிலவரங்கள் பின்வருமாறு:

கேரளம்

வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் போட்டியிடும் நிலையில், கேரள மாநிலத்தில் மொத்தமுள்ள 20 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி 17 இடங்களிலும், இடது ஜனநாயக முன்னணி 2 இடங்களிலும், பாஜக 1 இடத்திலும் வெற்றிபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.

கர்நாடகம்

கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 இடங்களில் காங்கிரஸ் - மஜத கூட்டணி 12 இடங்களிலும், பாஜக கூட்டணி 16 இடங்களிலும் வெற்றிபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு 2014 தேர்தலில் பாஜக 17 இடங்களில் வெற்றிபெற்றது.

ஆந்திரப் பிரதேசம்

ஆந்திர மாநிலத்தில் மொத்தமுள்ள 25 தொகுதிகளில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 20 இடங்களிலும் தெலுங்கு தேசம் கட்சி 5 இடங்களிலும் வெற்றிபெறும் என்று டைம்ஸ் நவ் கூறுகிறது. இங்கு காங்கிரஸ் ஓர் இடத்தில்கூட வெற்றிபெறாது என்றும் கூறப்பட்டுள்ளது.

தெலங்கானா

தெலங்கானாவில் உள்ள 17 தொகுதிகளில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி 12 இடங்களையும், காங்கிரஸ் - 2, பாஜக - 1 எனவும், இதர கட்சிகள் 2 தொகுதிகளைக் கைப்பற்றும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தெலங்கானா மக்களவைத் தேர்தலைத் தெலுங்கு தேசம் கட்சி புறக்கணித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிரம்

மகாராஷ்டிரத்தில் பாஜக - சிவசேனா கூட்டணிக்கு 38 இடங்களும், காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு 10 இடங்களும் கிடைக்கும் என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

குஜராத்

நரேந்திர மோடி, அமித் ஷா என பாஜக முக்கியத் தலைவர்களின் சொந்த மாநிலம் குஜராத். இங்கு 2014 தேர்தலில் மொத்தமுள்ள 26 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றியது. வரும் தேர்தலில் அதில் 4 தொகுதிகளை பாஜக இழக்கும் என்றும் அந்த 4 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றிபெறும் என்றும் டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு கூறியுள்ளது.

ராஜஸ்தான்

ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 தொகுதிகளில் பாஜகவுக்கு 18 தொகுதிகளும், காங்கிரஸுக்கு 7 தொகுதிகளும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இங்கு பாஜகவின் வாக்கு சதவிகிதம் 49.50 ஆகவும், காங்கிரஸின் வாக்கு சதவிகிதம் 43.05 சதவிகிதமாகவும் இருக்கும் என்று டைம்ஸ் நவ் கூறுகிறது.

டாமன் & டையூ மற்றும் தாத்ரா நகர் ஹாவேலி

டாமன் & டையூ மற்றும் தாத்ரா நகர் ஹாவேலி என 2 மக்களவைத் தொகுதியையும் பாஜகவே கைப்பற்றும் என்று கூறப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசம்

புதிய அரசு அமையப்போவதைத் தீர்மானிக்கும், நாட்டிலேயே அதிகமாக 80 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் பாஜக கூட்டணி 50 இடங்களைக் கைப்பற்றும் எனவும், சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி 27 இடங்களில் வெல்லும் எனவும் காங்கிரஸ் 3 இடங்களில் மட்டுமே வெற்றிபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது. இங்கு ராகுல் அமேதி தொகுதியிலும், சோனியா காந்தி ரேபரேலி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்தியப் பிரதேசம்

அண்மையில்தான் காங்கிரஸ் ஆட்சியமைத்த மத்தியப் பிரதேசத்திலுள்ள 29 தொகுதிகளில் பாஜக கூட்டணி 20 தொகுதிகளிலும் காங்கிரஸ் 9 தொகுதிகளிலும் வெல்லும் என்று கூறப்பட்டுள்ளது.

இமாச்சலப் பிரதேசம்

இமாச்சலப் பிரதேசத்திலுள்ள 4 தொகுதிகளில் 3 தொகுதிகளில் பாஜகவும், ஒன்றில் காங்கிரஸும் வெற்றிபெறும்.

பஞ்சாப்

பஞ்சாபிலுள்ள 13 தொகுதிகளில் காங்கிரஸ் 11லும், பாஜக 2 இடங்களிலும் வெல்லும் என்று கூறப்பட்டுள்ளது.

மேற்கு வங்கம்

மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை திருணமூல் காங்கிரஸ் கட்சிக்கு 31 இடங்களும், பாஜகவுக்கு 9 இடங்களும், காங்கிரஸுக்கு 2 இடங்களும் கிடைக்கும்.

ஒடிசா

ஒடிசாவிலுள்ள 21 தொகுதிகளில் பாஜகவுக்கு 12 இடங்களும் பிஜு ஜனதா தளத்துக்கு 8 இடங்களும், காங்கிரஸுக்கு 1 இடமும் கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

சத்தீஸ்கரிலுள்ள 11 தொகுதிகளில் 8இல் காங்கிரஸ் வெற்றிபெறும் எனவும், 3இல் பாஜக வெற்றிபெறும் எனவும், ஹரியானாவிலுள்ள 10 தொகுதிகளில் 8 இடங்களில் பாஜகவும் 2 இடங்களில் காங்கிரஸும் வெற்றிபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

இதேபோல உத்தராகண்டில் மொத்தமுள்ள 5 தொகுதிகளிலும், தலைநகர் டெல்லியிலுள்ள 7 இடங்களையும், சண்டிகரிலுள்ள 1 தொகுதியையும் பாஜகவே கைப்பற்றும் என்று கூறுகிறது டைம்ஸ் நவ் ஊடகத்தின் கருத்துக் கணிப்பு. ஜார்கண்டிலுள்ள 14 தொகுதிகளில் காங்கிரஸ், பாஜக தலா 7 தொகுதிகளைக் கைப்பற்றும் எனக் கூறப்பட்டுள்ளது.

செவ்வாய், 9 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon