மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 14 ஜூலை 2020

தேர்தல் சீர்திருத்தங்களால் பலன் ஏற்பட்டுள்ளதா?

தேர்தல் சீர்திருத்தங்களால் பலன் ஏற்பட்டுள்ளதா?

தேர்தலும் நன்கொடைகளும்: பகுதி 2 - நா.ரகுநாத்

1990களில் வரவேற்கத்தக்க சில சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. 1996ஆம் ஆண்டு ஜனவரி மாதம், பொதுநல வழக்கு ஒன்றுக்கு அளித்த தீர்ப்பில் அரசியல் கட்சிகள் ஒவ்வோர் ஆண்டும் வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்வதைக் கட்டாயமாக்கியது உச்ச நீதிமன்றம். அரசியல் கட்சிகள் வருமான வரி அறிக்கை, தணிக்கை செய்யப்பட்ட வரவு-செலவு கணக்குகளைத் தாக்கல் செய்யத் தவறும்பட்சத்தில், அவர்களுடைய செலவும் கட்சியின் வேட்பாளருடைய தேர்தல் செலவின் உச்ச வரம்புக்கு உட்பட்டதாகக் கருதப்படும் என்று அதே ஆண்டு ஏப்ரல் மாதம் மற்றொரு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், கட்சியால் தேர்ந்தெடுக்கப்பட்ட தணிக்கையாளர்களே கணக்குகளைத் தணிக்கை செய்ததால், அந்தத் தீர்ப்பின் நோக்கம் நிறைவேறாமல் போனது.

1990க்கு முன்பு கட்டுப்பாடுகள் நிறைந்த பொருளாதாரத்தில் தொழில் செய்து லாபம் சம்பாதிக்கப் பெரும் தனியார் நிறுவனங்கள் சட்டத்துக்குப் புறம்பான செயல்களில் ஈடுபட்டனர். வரிஏய்ப்பு செய்து, அந்தப் பணத்தில் ஒரு பகுதியை அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாகக் கொடுத்தனர். தனியார் நிறுவனங்கள் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கப் போடப்பட்ட தடை 1985இல் நீக்கப்பட்ட பிறகும், வரி விலக்கு ஏதும் அளிக்கப்படாததால் அவர்களுடைய லாபத்தில் ஒரு பகுதியை இழக்க நேரிட்டது.

1990களின் தொடக்கத்தில் பொருளாதாரத்தில் இருந்த பல கட்டுப்பாடுகளை நீக்கி, தங்குதடையற்ற இறக்குமதியையும் பன்னாட்டு நிறுவனங்களையும் வரவேற்றதால், உள்நாட்டு உற்பத்தியிலும் வியாபாரத்திலும் போட்டிச் சூழல் உருவானது. இதனால் உள்நாட்டு நிறுவனங்களின் லாபங்கள் மேலும் அடிவாங்கத் தொடங்கின. தங்களுடைய லாபங்களைக் காப்பாற்றிக்கொள்ள, அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் முறையில் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்று உணர்ந்த தனியார் துறை, இந்தியத் தொழிற்சாலைகளின் கூட்டமைப்பு (Confederation of Indian Industries - CII) தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவுக்குத் தேவைப்படும் பணத்தை அரசே வழங்க வேண்டும் என்ற பரிந்துரையை அந்தக் குழு முன்வைத்தது.

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் தனிநபர்கள், நிறுவனங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஜன் சத்தா எனும் தன்னார்வ அரசியல் அமைப்பு 1999இல் முன்மொழிந்தது. அதே ஆண்டு சட்ட கமிஷன் (Law Commission) வெளியிட்ட 170ஆவது அறிக்கை, தேர்தலின்போது அரசியல் கட்சிகள் செய்யும் செலவை வேட்பாளர்கள் செய்யும் செலவாகவே கணக்கில் கொள்ள வேண்டும் என்று பரிந்துரை செய்தது.

வெளிப்படைத்தன்மையை நோக்கி...

இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில், அரசியல் கட்சிகளுக்கு எந்த நிறுவனம் நன்கொடை வழங்கியது என்னும் விவரம் வெளியில் தெரிய வேண்டும், வேட்பாளர்களின் வருமானம் மற்றும் சொத்து குறித்த விவரங்கள் பொதுவெளியில் வைக்கப்பட வேண்டும் என்பதற்காக சில தன்னார்வ அரசியல் அமைப்புகள் கடுமையாக முயன்றன. இந்த முயற்சியில் Association for Democratic Reforms (ADR) எனும் அமைப்பின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. இந்த அமைப்பு, நவம்பர் 2000-த்தில் தேர்தலில் போட்டியிடுபவர்களின் கல்வித் தகுதி, நிதி மற்றும் குற்றப் பின்னணி குறித்த தகவல்கள் வேட்பு மனு தாக்கல் செய்யப்படும்போது சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு போட்டது.

இந்தத் தகவல்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு, பொதுவெளியில் வைக்கப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஆணையிட்டது. வேட்பாளர்கள் அனைவரும் வேட்பு மனு தாக்கல் செய்யும்போது மேற்கூறிய அனைத்துத் தகவல்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று மார்ச் 27, 2003 அன்று தேர்தல் ஆணையம் ஆணை பிறப்பித்தது.

அதே ஆண்டு செப்டம்பர் மாதம், அன்றிருந்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பிறப்பித்த சட்டத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்ய இரு முக்கிய சீர்திருத்தங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. முதலாவதாக, அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் தனிநபர்கள், நிறுவனங்களுக்கு 100 விழுக்காடு வரி விலக்கு அளிக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. காசோலை வழியாக வெளிப்படையாகவே நன்கொடை வழங்குவதை ஊக்குவிக்க இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டது. இரண்டாவதாக, ரூ. 20,000க்கு அதிகமாக நன்கொடை வழங்குபவர்களின் விவரங்களை அரசியல் கட்சிகள் ஆண்டுதோறும் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கியது.

இதில் ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். ரூ. 20,000க்குக் குறைவாக நன்கொடை வழங்குபவர்கள் பற்றிய விவரங்களை அரசியல் கட்சிகள் வெளியிடத் தேவையில்லை. ஊர், பெயர் வெளியிடப்படாத நபர்கள் வழங்கும் நன்கொடையே ஆறு பிரதான தேசியக் கட்சிகள் பெறும் மொத்த நன்கொடைகளில் 75 விழுக்காடாக இருக்கிறது. வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்ய எடுக்கப்படும் முயற்சிகள் முற்றிலுமாக வெற்றி பெறுவதில்லை.

அரசியல் கட்சிகளின் வருமான வரி அறிக்கைகள் பொதுவெளியில் வைக்கப்பட வேண்டும் என்று மத்திய தகவல் ஆணையத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி, ADR 2008ஆம் ஆண்டு கேட்டுக்கொண்டது. இதன் விளைவாக, 2004-05 தொடங்கி, 2007-08 வரையிலான வருமான வரி அறிக்கைகளை அரசியல் கட்சிகள் பொதுவெளியில் வைக்க நேரிட்டது. வரவேற்கத்தக்க முன்னேற்றம் என்று இதைக் கூறலாம்.

வெளிப்படைத்தன்மை சந்தித்த பின்னடைவு

நிதிச் சட்டம் 2017 வெளிப்படைத்தன்மையை வலுப்படுத்துவதாகக் கூறி, பல முக்கிய மாற்றங்களைக் கொண்டுவந்தது. முதலாவதாக, பணமாகக் கொடுக்கப்படும் நன்கொடையின் உச்ச வரம்பு ரூ. 20,000த்திலிருந்து ரூ. 2,000ஆகக் குறைக்கப்பட்டது. அதற்கு அதிகமாக நன்கொடை வழங்க விரும்புபவர்கள் காசோலை அல்லது இணையத்தின் மூலம் அதைச் செலுத்தலாம். ஆனால், ரூ. 20,000த்துக்குக் குறைவாக நன்கொடை வழங்குபவர்கள் பற்றிய விவரங்களை அரசியல் கட்சிகள் வெளியிடத் தேவையில்லை எனும் ஷரத்து மாற்றப்படவில்லை. சட்டத்தில் உள்ள ஓட்டைகள் வழியே புகுந்து செல்லத் தெரிந்தவர்களுக்கு நன்கொடையைச் சிறுசிறு தொகையாகப் பிரித்து வழங்குவது அவ்வளவு பெரிய சவாலா என்ன?

இரண்டாவதாக, தனியார் நிறுவனங்கள் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கக்கூடிய தொகையின் உச்ச வரம்பு முற்றிலுமாக நீக்கப்பட்டுவிட்டது. இதற்கு முன்பு, ஒரு தனியார் நிறுவனம் தன்னுடைய கடந்த மூன்று ஆண்டுகளின் நிகர லாபத்தில் 7.5 விழுக்காடு அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கலாம் என்று சட்டத்தில் சொல்லப்பட்டது. மேலும், இதற்கு முன்பு, எந்தக் கட்சிக்கு நன்கொடை வழங்கினார்கள் என்பதை தனியார் நிறுவனங்கள் கணக்கில் காட்ட வேண்டிய கட்டாயம் இருந்தது. 2017இல் அதுவும் நீக்கப்பட்டுவிட்டது.

மூன்றாவதாக, நன்கொடை வழங்குவதற்கும் பெறுவதற்கும் “தேர்தல் கடன் பத்திரங்கள்” (Electoral Bonds) என்பது அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தப் பத்திரங்களைக் குறிப்பிட்ட சில தேதிகளில் மட்டும் State Bank of Indiaவிடமிருந்து நன்கொடை வழங்க நினைக்கும் நபர்களோ அல்லது நிறுவனங்களோ காசோலை வழங்கிப் பெற்றுக்கொள்ளலாம். வாங்கிய கடன் பத்திரத்தை எந்தக் கட்சிக்கு நன்கொடை வழங்க விரும்புகிறார்களோ அந்தக் கட்சியிடம் ஒப்படைத்துவிட வேண்டும். கடன் பத்திரத்தைப் பெற்றுக்கொண்ட அரசியல் கட்சி தன்னுடைய வங்கியில் அதை ஒப்படைத்துத் தனது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட நன்கொடையைப் பெற்றுக்கொள்ளலாம். இவை அனைத்தும் 15 நாட்களுக்குள் நடக்க வேண்டும்.

இந்தப் பரிவர்த்தனைகள் அனைத்துமே பொதுவெளியில் வைக்கப்பட மாட்டாது. அரசியல் கட்சிகளும், யாரிடம் தேர்தல் கடன் பத்திரங்கள் வழியாக நன்கொடை பெற்றார்கள் எனும் விவரங்களை வெளியிடத் தேவையில்லை. நன்கொடை கொடுத்தவரின் அடையாளம் ரகசியம் காக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த ஏற்பாடு. முதல் இரண்டு மாற்றங்களோடு இந்தத் தேர்தல் கடன் பத்திரங்களின் செயல்பாட்டை இணைத்துப்பார்த்தால் புலப்படும் உண்மை இதுவே: பெரும் தனியார் நிறுவனங்களும், பண பலம் படைத்தவர்களும் சட்டத்துக்குட்பட்டே, யாருக்கு எவ்வளவு வழங்கினார்கள் எனும் தகவலை வெளியிடாமலேயே எந்த வரையறையும் இன்றிக் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கலாம். இதில் என்ன வெளிப்படைத்தன்மை இருக்கிறது?

இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலம்?

1991க்குப் பிறகு, பொருளாதாரத்தில் அரசின் பங்கைக் குறைக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டு, பல பொதுத்துறை நிறுவனங்கள் மூடப்பட்டன; மேலும் ஒருசில பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு விற்கப்பட்டன. இது தனியார்மயத்தின் ஓர் அம்சம். அதன் மற்றோர் அம்சம், இயற்கை வளங்களைத் தனியார் நிறுவனங்களுக்கு விற்பது. அரசின் சொத்துகளும் இயற்கை வளங்களும் ஆட்சியில் இருப்பவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கே அவற்றின் சந்தை மதிப்பைவிடக் குறைவான விலைக்கு விற்கப்பட்டது. நாட்டில் பெரும் செல்வந்தர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்கும், மற்றவர்களைவிட இவர்களிடம் செல்வம் குவிந்ததற்கும் இதுவே முக்கியக் காரணம். இந்தப் போக்கு தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது.

2000-2013 காலத்தில் நடைபெற்ற 28 ஊழல் விவகாரங்கள் பற்றிய பட்டியல் ஒன்றைத் தயாரித்த சுக்தாங்கர், வைஷ்ணவ் எனும் அரசியல் பொருளாதார ஆராய்ச்சியாளர்கள், இந்த ஊழல்கள் ஒவ்வொன்றின் சராசரி மதிப்பு ரூ. 36,000 கோடி என்று கணக்கிடுகிறார்கள். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு, நிலக்கரிச் சுரங்கம் ஒதுக்கீடு, காமன்வெல்த் போட்டிக்கான கட்டமைப்பை உருவாக்கத் தனியாருக்கு அளிக்கப்பட்ட ஒப்பந்தங்கள், ராணுவத் தளவாடங்கள் கொள்முதல் ஆகிய அனைத்திலும் இருக்கும் முறைகேடுகள், அரசியல்வாதி - தொழிலதிபர் இடையே நிலவும் நெருக்கமான உறவின் விளைவுகளே.

இத்தகைய நிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அரசியல் கட்சிகளைக் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையை அனைத்துக் கட்சிகளும் ஒற்றுமையாக நின்று எதிர்த்தன. அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவுக்கு யாரிடமிருந்து பணம் வருகிறது, அது எதற்காகச் செலவிடப்படுகிறது, பணம் கொடுத்தவருக்கும் வாங்கியவருக்கும் இடையே எவ்வகை உறவும் உடன்படிக்கையும் உள்ளது என்பதில் வெளிப்படைத்தன்மை அவசியம். அது இல்லாதவரை, இந்திய ஜனநாயகத்தின் தன்மையைப் பணநாயகத் தேர்தல்கள் தீர்மானிக்கும் போக்கு வலுப்பெற்றுக்கொண்டேதான் இருக்கும்.

பகுதி 1

திங்கள், 8 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon