மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 13 ஜூலை 2020

தமிழகப் பள்ளிக் கல்வி நிலை – என்ன சொல்கிறது ASER அறிக்கை?

தமிழகப் பள்ளிக் கல்வி நிலை – என்ன சொல்கிறது ASER அறிக்கை?

இந்திய மாநிலங்களில் பள்ளிக் கல்வியின் நிலை என்ன, வழங்கப்படும் கல்வியின் தரம் என்ன என்பவை குறித்து ஒவ்வோர் ஆண்டும் பிரதம் (Pratham) என்னும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் ஆய்வு மேற்கொண்டு, Annual Status of Eduction Report (ASER) எனும் அறிக்கையை வெளியிடும். இந்த ஆய்வில் பங்குகொள்பவர்கள் 3-16 வயதுக் குழந்தைகளே. இவர்களுக்குக் கட்டாயக் கல்வி வழங்க வேண்டும் என்று தேசிய அளவில் சட்டம் இருக்கிறது. வாசிப்பு மற்றும் கூட்டல், கழித்தல் போன்ற அடிப்படைத் திறன்கள் குழந்தைகளுக்கு இருக்கின்றனவா என்பதை அறிந்துகொள்வதே இந்த ஆய்வின் நோக்கம்.

2018ஆம் ஆண்டுக்கான ASER அறிக்கை தமிழக ஊரக மாணவர்களின் அடிப்படைத் திறன்களைப் பற்றி என்ன சொல்கிறது என்பதை இரண்டு குறியீடுகளை மட்டும் எடுத்துக்கொண்டு பார்ப்போம்.

வாசிப்பு, கணக்கு ஆகிய இரண்டிலும் ஆண்களைவிடப் பெண்களே அதிக திறன் உள்ளவர்களாக இருப்பது தெரியவருகிறது. ஆனால், இரண்டாவது வகுப்புப் பாடத்தை எளிதாகப் படிக்கும் 8-10 வயது மாணவர்களின் எண்ணிக்கை முப்பது விழுக்காட்டுக்கும் குறைவானது என்பது கவலையளிக்கிறது. 14-16 வயது மாணவர்களிலும் 100 விழுக்காடு மாணவர்களால் அதை எளிதாகப் படிக்க முடியவில்லை எனும் தகவலை, நம்முடைய கல்வித் தரத்தை உடனடியாக உயர்த்த வேண்டும் என்பதற்கான அறிகுறியாக நாம் எடுத்துக்கொள்ளலாம்.

உத்தரப் பிரதேசம், பிகார் போன்ற மாநிலங்களைவிடச் சில குறியீடுகளில் தமிழ்நாடு பின்தங்கி இருப்பதாக இதற்கு முந்தைய அறிக்கைகளில் பிரதம் கூறியிருக்கிறது. ஆனால், தமிழ்நாடு போன்ற ஒரு மாநிலத்தில் பள்ளி மாணவர்களின் அடிப்படைத் திறன்கள் இவ்வளவு குறைவாக இருக்காது, ASERஇன் ஆய்வு நெறிமுறைகள் பரிசீலிக்கப்பட வேண்டும் என்பது தமிழ்நாட்டின் கல்வியாளர்களும், கல்வித் துறையில் உள்ள உயரதிகாரிகளும் தெரிவிக்கும் கருத்தாக உள்ளது.

செவ்வாய், 9 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon