மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 9 ஜூலை 2020

எட்டு வழிச் சாலைக்குத் தடை: எறியப்பட்ட எல்லைக் கற்கள்!

எட்டு வழிச் சாலைக்குத் தடை: எறியப்பட்ட எல்லைக் கற்கள்!

கடந்த ஆண்டு மே மாதம் சென்னையை அடுத்துள்ள தாம்பரத்திலிருந்து, சேலம் புறநகர் பகுதியான அரியானூர் வரையில் மொத்தம் 277.3 கிலோமீட்டர் தூரத்துக்குப் புதிய எட்டு வழிச் சாலை அமைக்கத் திட்டமிடப்பட்டு அதற்காக 2,200 ஹெக்டேர் பரப்பளவு நிலம் கையகப்படுத்த தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.

இதுகுறித்து முறையான அறிவிப்புகள் வெளியிடாமலும், நிலம் கையகப்படுத்தப்படும் விவசாயிகளிடம் கருத்து கேட்காமலும் அரசு காவல் துறையினரைக்கொண்டு மக்களை மிரட்டி விவசாய நிலங்களில் அளவீடு செய்து கல் நடவு செய்து வந்தனர் அரியானூரிலிருந்து பூலாவரி, பாரப்பட்டி, நிலவரப்பட்டி, ஊத்துமலை, மாசிநாய்க்கன்பட்டி, ராமலிங்கபுரம், குப்பனூர் உள்ளிட்ட பல கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களின் வழியாக சேலம் மாவட்டத்தில் 36.3 கிமீ தொலைவுக்கு 70 மீட்டர் அகலத்தில் நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து முடிந்தது.

இந்த நேரத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்கள் நிலங்களில் அளவீடு செய்யக் கூடாது என்று தடுத்தபோதும், அதிகாரிகளிடம் வாதம் செய்தபோதும் காவல் துறையைக் கொண்டு பொது மக்களை கைது செய்து சிறையில் அடைத்து வந்தது தமிழக அரசு. பாதிக்கப்பட்ட விவசாயிகளின் உள்ளக்குமுறல்கள் மின்னம்பலம் உட்பட பல்வேறு ஊடகங்களின் மூலமாக வெளியுலகுக்குத் தெரியவந்தன.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகள் சார்பாக நாம் தமிழர் மற்றும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பினர், பாமக எம்.பி.டாக்டர் அன்புமணி ஆகியோர் சென்னை உயர்நீதி மன்றத்தில் அரசின் நடவடிக்கையை எதிர்த்து வழக்கு தொடர்ந்தனர் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நேற்று (ஏப்ரல் 8) வழங்கிய தீர்ப்பில் விவசாயிகளின் நிலங்களை அரசு கையகப்படுத்தும் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட மக்கள் எல்லோரும், ராமலிங்கபுரத்திலுள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோயில் முன்பாக கூடினர். விவசாயிகளுக்குச் சாதகமாக உயர் நீதிமன்றத் தீர்ப்பு அமைந்ததால், அங்கிருந்த எல்லோருக்கும் இனிப்பு கொடுத்து மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொண்டனர். அப்போது, அங்கு வந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஊடகத் துறை நண்பர்கள் எல்லோருக்கும் இனிப்பு வழங்கிய விவசாயிகள் “எந்த ஆதரவும் இல்லாமல் சொந்த நிலத்திலேயே அகதியாக நின்ற எங்களுக்குப் பத்திரிகைத் துறையை சேர்ந்த நீங்கள்தான் சிறப்பான முறையில் செய்தி வெளியிட்டு, எங்கள் வாழ்கையை மீட்டுக் கொடுத்துள்ளீர்கள்” என்று கட்டிப்பிடித்து தங்களின் நன்றியை வெளிப்படுத்தினார்கள்.

அரசு கையகப்படுத்திக் கல் நடவு செய்த நிலம் விவசாயிகளிடம் திருப்பி ஒப்படைக்கப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் இருந்ததை அறிந்த விவசாயிகள், அரசு அதிகாரிகள் விவசாய நிலங்களில் நடவு செய்திருந்த முட்டுக் கற்களை எல்லாம் பிடுங்கி வீசி தங்களின் வெற்றி உணர்வுகளை வெளிப்படுத்தினார்கள்.

செவ்வாய், 9 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon