மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 10 ஜூலை 2020

பாஜக வரலாற்றில் அத்வானி இல்லாத முக்கிய நிகழ்ச்சி!

பாஜக வரலாற்றில் அத்வானி இல்லாத முக்கிய நிகழ்ச்சி!

பாரதிய ஜனதா கட்சியின் வரலாற்றிலேயே அத்வானி கலந்துகொள்ளாத முக்கிய நிகழ்ச்சி நேற்று நடந்த தேர்தல் அறிக்கை வெளியீடுதான் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.

பாஜகவில் 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் தேர்தலில் பங்கெடுக்கக்கூடாது என உயர்மட்டக் குழு முடிவு எடுத்துள்ளதால் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சுமித்ரா மகாஜன் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் இம்முறை போட்டியிடவில்லை. அத்வானி போட்டியிட்ட காந்தி நகர் தொகுதியில் இம்முறை பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா போட்டியிடுகிறார். தனக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அத்வானி மிகுந்த அதிருப்தியில் இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரத்திலிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

இதன்படி இவர்கள் தற்போது கட்சியின் வழிகாட்டும் குழுவில் உள்ளார்கள். கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் ஜனநாயகத்தையும், ஜனநாயக மரபுகளையும் பாதுகாப்பதே பாஜகவுக்கு பெருமை என்று ஏப்ரல் 4ஆம் தேதி வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அத்வானி கூறியிருந்தார். அந்த அறிக்கை மோடியை மறைமுகமாக சாடும் விதமாகவே இருப்பதாக பாஜக வட்டாரத்தில் கூறப்பட்டது.

இந்நிலையில் நேற்று (ஏப்ரல் 8) டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி, ராஜ்நாத் சிங் போன்ற முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆனால் பாஜகவை நிறுவியவர்களில் ஒருவரான அத்வானியும், மூத்த நிர்வாகி முரளி மனோகர் ஜோஷி போன்றவர்கள் பங்கேற்கவில்லை. இதற்கான காரணம் தற்போது வெளிவந்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு அத்வானிக்கும், முரளி மனோகர் ஜோஷிக்கும் பாஜக மேலிடத்திலிருந்து அழைப்பு விடுக்கப்படவில்லை. அதனால்தான் இருவரும் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையை தயாரித்த குழுவில் அத்வானியும், முரளி மனோகர் ஜோஷியும் தலைமை வகித்தவர்கள். அவர்களை 2019 தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் இணைக்காததும், தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவுக்கு அழைக்காததும் பாஜக வட்டாரத்திலேயே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தி பிரிண்ட் ஊடகத்திடம் பெயர் குறிப்பிட விரும்பாத பாஜக மூத்த நிர்வாகி ஒருவர் பேசுகையில், “பாரதிய ஜனதா கட்சியின் வரலாற்றிலேயே அத்வானியும், ஜோஷியும் இல்லாத முதல் முக்கிய நிகழ்ச்சி இதுதான். அதேபோல மேலும் சில முக்கிய நிர்வாகிகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை” என்று கூறியுள்ளார். அந்த முக்கிய நிர்வாகி நிதின் கட்கரிதான் என்று கூறப்படுகிறது. 2019 தேர்தலில் பிரதமர் வேட்பாளராக நிதின் கட்கரியை முன்னிறுத்த முயற்சிகள் நடப்பதாக ஆரம்பத்தில் செய்திகள் அடிபட்டன. ஆனால் அதனை கட்கரியே மறுத்துவிட்டார்.

இந்நிலையில் தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் அவர் கலந்துகொள்ளாதது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், “இன்றும், நாளையும்தான் தேர்தல் பிரச்சாரத்துக்கு கடைசி 2 நாட்கள். அதனால் தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் என்னால் கலந்துகொள்ள இயலவில்லை. அமித்ஷாவுக்கு எனது வாழ்த்துகள். பிரதமர் மோடி தலைமையில் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவோம் மற்றும் நம்பிக்கையும் உள்ளது” என்று நேற்று ட்விட்டரில் கட்கரி கூறியுள்ளார்.

செவ்வாய், 9 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon