மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 26 செப் 2020

டிஜிபியாக ரஜினி: 28 வருட காத்திருப்பு!

டிஜிபியாக ரஜினி: 28 வருட காத்திருப்பு!

28 வருடங்களுக்குப் பிறகு ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் ‘தர்பார்’ பட டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

பொங்கலுக்கு வெளியான ‘பேட்ட’ திரைப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் முதன்முறையாக இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் இணைந்துள்ளார். இது ரஜினிகாந்த் நடிக்கும் 167ஆவது படமாகும். ஷங்கரின் ‘2.0’ படத்திற்கு பிறகு லைகா புரொடக்‌ஷன்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது.

சில தினங்களுக்கு முன் இந்தப் படத்திற்கான போட்டோ ஷூட் நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் சிலரால் வெளியிடப்பட படத்தில் ரஜினி காவல்துறை அதிகாரியாக நடிக்கிறாரோ என்ற யூகங்கள் கிளம்பின. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 9) காலை 8.30 மணிக்கு லைகா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் “தர்பார்” என்ற தலைப்பில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

போஸ்டரில் என்ன ஸ்பெஷல்?

ஏற்கெனவே வெளியான புகைப்படங்களால் உருவாகிய யூகங்ககளுக்கு வலு சேர்க்கும் விதமாக தற்போது வெளியாகியுள்ள போஸ்டர் அமைந்துள்ளது. மூன்று முகம், கொடி பறக்குது, பாண்டியன் திரைப்படங்களைத் தொடர்ந்து ‘தர்பார்’-இல் போலீஸ் கெட்டப்பில் ரஜினிகாந்த் வருவதை போஸ்டரில் இடம்பெற்றுள்ள படங்கள் உறுதிசெய்கின்றன.

காவல் துறையின் பெல்ட், துப்பாக்கிகள், டிஜிபி ரேங்க்கை குறிக்கும் தோள் பட்டை மற்றும் தொப்பி, காவல்துறை நாய் ஆகியவை போஸ்டரில் இடம்பெற்றுள்ளன. ரஜினியின் தலைக்கு மேலிருக்கும் மும்பையின் கேட்வே ஆப் இந்தியா மற்றும் மேப் ஆகியவை மும்பையில் நிகழும் கதை என யூகிக்க வைக்கிறது. அதிரடி ஆக்‌ஷன் கதைக்கு ஏற்ப ‘You decide whether you want to be good, bad or worse' என்ற சொற்றொடர் அமைந்துள்ளது.

குசேலனுக்குப் பிறகு 11 ஆண்டுகளுக்குப் பின் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர் ரஜினியுடன் நடிக்கும் நான்காவது படம் இதுவாகும்.

தளபதி படத்துக்குப் பின் 28 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினிகாந்த் படத்தில் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். இவர் ஏற்கனவே ஏ.ஆர். முருகதாஸுடன் இரண்டு படங்கள் பணியாற்றியிருக்கிறார். ‘பேட்ட’க்கு பின் ரஜினிகாந்துடன் இரண்டாவது முறையாக அனிருத் இசையமைக்கிறார். எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத்தும், கலை இயக்குநராக டி. சந்தானமும் தர்பார் அணியில் சேர்ந்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நாளை (ஏப்ரல் 10) தொடங்குகிறது.

ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 9 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon