மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 26 செப் 2020

8 வழிச்சாலை தீர்ப்பு: அரசுக்கு எதிராக பாமக மனு!

8 வழிச்சாலை தீர்ப்பு: அரசுக்கு எதிராக  பாமக  மனு!

8 வழிச்சாலை வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பு வாதத்தைக் கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் பாமக சார்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

சென்னை, சேலம் இடையேயான 8 வழிச்சாலை திட்டத்திற்குத் தடை விதிக்க வேண்டும். திட்டத்தைக் கைவிட உத்தரவிட வேண்டும் என்று விவசாயிகள், பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தன.

இந்த வழக்கு கடந்த 10 மாதங்களுக்கும் மேலாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 8), ”8 வழிச்சாலை திட்டத்துக்காக விவசாயிகளிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட நிலங்களைத் திரும்பி அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும்” என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த தீர்ப்பு விவசாயிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பால் வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களிடம் பேசுகையில், ’8 வழிச்சாலை திட்டம் தொடர்பான நீதிமன்ற உத்தரவால் தமிழக அரசுக்குப் பின்னடைவு கிடையாது. உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும்” என்று தெரிவித்திருந்தார்.

ஆனால் இந்த தீர்ப்புக்கு எதிராக மத்திய மாநில அரசுகள் மேல்முறையீடு செய்யக் கூடாது, இந்த வழக்கில் உழவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக உச்ச நீதிமன்றத்தில் பாமக சார்பில் கேவியட் மனுத் தாக்கல் செய்யப்படும் என்று அன்புமணி தெரிவித்திருந்தார்.

அதன்படி இன்று காலை பாமக சார்பில் வழக்கறிஞர் பாலு உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுத் தாக்கல் செய்துள்ளார். தங்கள் தரப்பு வாதம் இல்லாமல் இவ்வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் அதிமுகவும், பாமகவும் 8 வழிச்சாலை திட்டத்தில் வெவ்வேறு பாதையில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 9 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon