தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகமும், தென்னகப் பண்பாட்டு மையமும் இணைந்து 2019 மார்ச் 18 முதல் 23ஆம் தேதி வரையிலும் ஆறு நாட்களுக்குப் பல்வேறு இடங்களிலிருந்து பல்வேறு நாடகக் குழுக்களை வரவழைத்து, பல நாடகங்களை நடத்தித் தஞ்சை மக்களுக்குக் கலை விருந்து படைத்துள்ளார்கள். நாடகக் கலை மக்களிடமிருந்து அந்நியப்படவில்லை என்பதற்கு அரங்கத்திற்கு வந்த பொதுமக்களே சாட்சி.
6 நாள் நாடகங்களில் கடைசியாக அரங்கேற்றப்பட்ட நாடகம் பெத்தவன். எழுத்தாளர் இமயத்தின் கதை பேராசிரியர் ராஜுவின் இயக்கத்தில் மிக நேர்த்தியாக வடிவமைத்துப் படைக்கப்பட்டுள்ளது. நாடகம் தமிழ் மக்களின் வாழ்வோடும், தமிழ் மொழியோடும் தங்களின் உழைப்பு சார்ந்தே பயணிக்கும் ஓர் அற்புதமான வடிவம். அந்தக் கலை வடிவின் வலிமையை நன்கு பயன்படுத்திக்கொண்ட நாடகம் இது.
பார்ப்போரின் கண்களில் நீர்த்திவலைகளை உதிரச் செய்யும் நேர்த்தியான படைப்பு இது. ஒளி - ஒலி அமைப்பு, பின்னணி இசை, நடிப்பு போன்றவற்றால் இந்த நாடகத்தின் காட்சிகள் கண் முன் உயிர்த்தெழுகின்றன.
சாதியத்தின் குரூர முகம்
முதலில் பெத்தவன் நாடகத்தின் கதைச் சுருக்கத்தைப் பார்த்துவிடுவோம். நடுத்தர வர்க்கக் குடும்பப் பின்னணியில் ஆதிக்கச் சாதியின் பின்புலத்தில் இமையம் எழுதிய கதை இது. சாதி எல்லையைத் தாண்டிக் காதலித்த தன் மகளை ஊர் கட்டுப்பாட்டிற்காக விஷம் கொடுத்துக் கொன்றுவிடுவதாகக் கிராம பஞ்சாயத்தார் முன்னிலையில் பழனி வாக்கு கொடுத்துவிடுகிறான். ஆனாலும், தன் மகளுக்கு விஷம் கொடுக்க மனமில்லாமலும், தன் மீது படிந்துள்ள சாதிய அழுக்கைத் துடைத்தெறிய முடியாமலும் தத்தளிக்கிறான். இந்தத் தத்தளிப்பின் முடிவு என்ன என்பதுதான் பெத்தவன் கதை.
ஆணவக் கொலைகளின் அதிரவைக்கும் பின்னணியை, அதில் வெளிப்படும் சாதியத்தின் குரூர முகத்தைத் தகப்பனின் பார்வையிலிருந்து சொல்லும் கதை இது.
கரிகால் சோழன் அரங்கிலும், அரங்கிற்கு வெளியேயும் சில நாடகங்கள் நடந்தன. அரங்கின் வெளியே நடந்த நாடகங்களில் ஒன்று ‘பெத்தவன்’. அரங்கின் வெளியே இருந்தது ஓர் ஆலமரம். அந்த ஆலமரத்தை வைத்தே அழகிய கிராமியச் சூழலை உருவாக்கியிருந்தார்கள். அந்த ஆலமரத்தின் அருகிலேயே பனை ஓலைகளால் வேயப்பட்ட சிறிய குடில், அந்தக் குடிலைச் சுற்றி பனங் கருக்குகளால் கட்டப்பட்ட வேலி, வேலியை ஒட்டிய வைக்கோல் போர், வீட்டின் எதிர் திசையில் ஆலமரத்தின் நிழலில் யாரும் வந்தால் அமர்ந்து பேச ஒரு திண்ணை போன்ற காட்சிப் பின்புலங்களின் மூலம் பேராசிரியர் ராஜு கிராமியச் சூழலைக் காட்சிப்படுத்தியுள்ளார்.
நடிப்பு எந்த ஒப்பனையுமின்றி யதார்த்தமாக அமைந்திருந்தது. பழனியின் பாத்திரம், தந்தைக்கு உண்டான குணாதிசயங்களைக் கச்சிதமாகப் பிரதிபலிக்கிறது. தன் தாயிடமும் மனைவியிடமும் காட்டும் கோபம், தனக்கு நேர்ந்த அவலத்திற்கு மூல காரணமான தன் மகளிடம் காட்டும் பரிவு, நடக்க இயலாத தன் இளைய மகளிடம் ‘நான் இல்லையென்றாலும் உன்னைப் பாதுகாக்க அந்த ஆண்டவன் இருக்கிறான்’ என்று பேசுவது ஆகியவற்றின் மூலம் பழனி கதாபாத்திரம் அரங்கில் உள்ளவர்களை நிமிர்ந்து உட்காரச் செய்துவிடுகிறது.
மனைவியாக வரும் பெண், தன் தன் மகள் தன்னை விட்டுப் பிரியப்போகிறாள் என்ற கவலையோடு கணவரிடம் மகளுக்காகப் பரிந்து பேசும் காட்சியில் தாய்க்கே உரிய பாங்கில் மிளிர்கிறார்.
பழனியின் மகளாக வரும் மாணவி, உடல் குறைபாடு கொண்டவராக நடித்த மாணவி, இவர்களுக்கு வில்லியாக நடித்த மாணவி ஆகியோரின் நடிப்பு அருமை.
கடைசியில் தன் மகளுக்கு நகைநட்டுகளைக் கொடுத்து, “இதை வைத்து நீ உன் படிப்பை மேலும் தொடரணும், படித்து பெரிய வாத்தியாராக வர வேண்டும்” என்று கூறித் தகப்பன் வழியனுப்பும் காட்சி ஒரு நல்ல குறியீடு. மக்களுக்கு அறிவு புகட்டும் வேலையைத் தன் மகள் செய்யும்போது அது மேலும் பல மகள்களுக்கும் கிட்டும், அதன் மூலம் அடுத்த தலைமுறையாவது சாதிய ஆணவமற்ற அறிவுபூர்வமான சமூகமாக மிளிரும் என்ற நம்பிக்கையாக இதைக் கொள்ளலாம்.
பஞ்சாயத்தார்கள் அமர்ந்து, ஆலமரத்திண்ணையில் பஞ்சாயத்து நடக்கின்றபோது, கேட்கின்ற கேள்விகளும், பதில்களும் சமூகத்தை நோக்கி வீசுகின்ற கூர்மையான கேள்விக் கணைகளாகவே அமைகின்றன.
நடிகர்களுக்கு எந்தவித ஒப்பனையுமில்லாமல், கிராமப்புறத்தில் யதார்த்தமாக நடைபெறுகின்ற கூட்டத்தைப் போலவே இயக்குநர் வடிவமைத்திருக்கிறார். ஒளியின் கீற்று சம்பந்தமில்லாமல் யார் மீதும் கொஞ்சம்கூடப் படவில்லை. காட்சியின் தன்மைக்குத் தகுந்தவாறு ஒளியினுடைய வர்ண ஜாலங்கள் நாடகத்தை மேலும் வலுவூட்டுவதாக அமைந்திருக்கின்றன.
சிறந்த நாடக உத்திகளுடன், பயிற்சி பெற்ற நாடகக் கலைஞர்களை வைத்து நாடகத்தை உச்சம் தொட வைத்துவிட்டார் இயக்குநர். பல்வேறு தொழில்நுட்பக் கலைஞர்களின் நேர்த்தியான உழைப்பும் நாடகத்தை உயர்த்தியிருக்கிறது.
விடை தெரியாத கேள்வி
நாடகம் தெரிவிக்கும் ஒட்டுமொத்தச் செய்தியைப் பற்றி ஒரு கேள்வி எழுகிறது. சாதி எல்லையைத் தாண்டி ஒரு திருமணம் நடப்பதால் ஏற்படக்கூடிய சாதிக் கலப்பு நிகழவிடாமல் தடுக்க இருவரையும் கொலை செய்துவிட வேண்டும்; அல்லது சம்பந்தப்பட்டவர் தன்னைத்தானே மாய்த்துக்கொள்ள வேண்டும். இதுதான் இந்தக் கதை கூறும் செய்தி. யதார்த்தத்தின் பதிவு என்னும் முறையில் இந்தச் செய்தி வலுவாகவே பார்வையாளர்களுக்குக் கடத்தப்படுகிறது.
ஆனால், இத்தகைய சாதி ஆணவக் கொலைகளுக்கான தீர்வு என்பது என்ன என்னும் கேள்வி கேட்பாரற்றுக் காற்றில் ஊசலாடுகிறது. கதை அச்சிடப்பட்ட காகிதத்திலோ நாடகம் நிகழ்த்தப்பட்ட அரங்கிலோ இந்தக் கேள்விக்கான பதில் கிடைக்கவில்லை. எழுத்தாளரோ, இயக்குநரோ இந்தக் கேள்வியை எதிர்கொள்ளவில்லை. இந்நிலையில் இந்த நாடகம் எழுப்பும் உணர்வு என்பது ஏற்க முடியாத யதார்த்தத்தின் சுமையாகப் பார்வையாளர்கள் மனதில் தங்கிவிடுகிறது.