மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 19 செப் 2020

தஞ்சை: கமிஷன் பேரத்தால் பறிபோன வேலைகள்: வைகோ

தஞ்சை: கமிஷன் பேரத்தால் பறிபோன வேலைகள்: வைகோ

தஞ்சை மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்தை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆபிரகாம் பண்டிதர் சாலையில் பரப்புரைக் கூட்டம் நடத்தினார். அப்போது பேசிய வைகோ, “வேலையில்லா திண்டாட்டத்தினால் தமிழகத்தில் இன்றைக்கு 80 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதனால், பிள்ளைகள் வளமாக வாழவேண்டும் என நினைத்த லட்சக்கணக்கான குடும்பங்களின் கனவுகளெல்லாம் மண்ணோடு மண்ணாகிவிட்டது. நான்காம் வகுப்பு படித்திருந்தால் போதும், இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்று விளம்பரம் வருகிறது. அந்த வேலைக்கு விண்ணப்பித்தவர்களில் 4,000 பேர் பொறியியல், மேலாண்மை பட்டதாரிகள்.

இந்த வேலையில்லா திண்டாட்டத்திற்கு என்ன காரணம்? இங்கு வரவிருந்த ஃபோர்டு தொழிற்சாலை, ஆயிரக்கணக்கானோருக்கு வாய்ப்பளிக்கக்கூடிய ஆலை சென்னை புறநகர்ப் பகுதியை தேர்ந்தெடுத்து வந்தார்கள். ஆளும்கட்சியின் கமிஷன் பேர அணுகுமுறையால், கெடுபிடியால் குஜராத் மாநிலத்துக்கு போய்விட்டது. ஜப்பான் நாட்டி இசுஸு தொழிற்சாலை அமைக்க தமிழகத்தில் நல்ல இடத்தை தேர்ந்தெடுத்தார்கள். இந்த ஆலையால் நம்மில் பெரும்பாலானோருக்கு வேலை கிடைத்திருக்கும். ஆனால் ஆளும்கட்சி பணம் கேட்டதால் இந்த பகுதிக்கே வரமாட்டோம் என ஆந்திராவின் ஸ்ரீசிட்டிக்கு சென்றுவிட்டார்கள்.

இதே காரணத்தால் ஹோண்டா நிறுவனமும் ஆந்திராவுக்கு சென்றுவிட்டது. கியா கார் தொழிற்சாலை ரூ.9750 கோடி முதலீட்டில் தமிழகத்தில் அமையவிருந்தது. தமிழக அரசின் பேரத்தால் அவர்களும் ஆந்திராவின் அனந்தபூருக்கு போய்விட்டார்கள். வேலையில்லா திண்டாட்டம் ஒருபக்கம் இருக்கும்போது மத்திய அரசு நீட் தேர்வை கொண்டுவந்து ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த அனிதா மருத்துவராக முடியாமல் போனது. நீட் தேர்வு தமிழகத்துக்கு ரத்து செய்யப்படும் எனவும், கல்வி மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவரப்படும் எனவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவித்திருக்கிறார். இது திராவிட இயக்கத்தின் வெற்றி, மாநில உரிமைகளின் வெற்றி” என்று பேசினார்.

செவ்வாய், 9 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon