மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 13 ஜூலை 2020

பாஜகவினரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ரூ.8 கோடி!

பாஜகவினரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ரூ.8 கோடி!

ஹைதராபாதில் வாகனச் சோதனையின்போது ரூ.2 கோடி பிடிபட்டதாகவும், அதன் பிறகு வங்கிகளுக்கு அருகில் இருந்த 5 நபர்களிடம் இருந்து சுமார் 6 கோடி ரூபாய் போலீசாரால் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இந்தப் பணம் பாஜகவினருக்குச் சொந்தமானது என்று தற்போது தெரியவந்துள்ளது.

வரும் ஏப்ரல் 11ஆம் தேதியன்று ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆந்திராவில் சட்டமன்றத் தேர்தலும் அதே தினத்தில் நடைபெறவுள்ளது. நேற்று (ஏப்ரல் 8) ஹைதரபாத் மாநகர போலீசார் நாராயணகுடா பகுதியில் 8 கோடி ரூபாய் பணத்தைக் கைப்பற்றினர். முதலில், வாகனச் சோதனையின்போது 2 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. அதில் இருந்த 2 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் தொடர்ச்சியாக, அப்பகுதியிலுள்ள ஒரு வங்கியின் அருகே 5 பேரைச் சுற்றி வளைத்தனர் போலீசார். அவர்களிடம் இருந்து சுமார் 6 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்தப் பணம் ஒரு கட்சிக்குச் சொந்தமானது என்று போலீஸ் வட்டாரம் தகவல் தெரிவித்தது. இந்த நிலையில், இது தங்களுடைய பணம் என்று தெரிவித்துள்ளனர் பாஜகவினர். வாக்காளர்களுக்குச் சட்ட விரோதமாகப் பட்டுவாடா செய்வதற்காக இந்த பணம் கொண்டுசெல்லப்பட்டது என்று ஊடகங்களில் தகவல் பரவிய நிலையில், இந்த விளக்கம் வெளியிடப்பட்டுள்ளது.

பாஜகவின் வங்கிக் கணக்கிலிருந்து இந்தப் பணம் எடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார் தெலங்கானா பாஜக செய்தித் தொடர்பாளர் கிருஷ்ணசாகர் ராவ். “கட்சிப்பணி ஆற்றிய சில நிறுவனங்களுக்குத் தர வேண்டிய சிறிய பாக்கித் தொகைக்காக, இந்த பணம் வங்கியிலிருந்து எடுக்கப்பட்டது. இதனை அலுவலகத்துக்குக் கொண்டுவருவதற்குள் காரின் கண்ணாடியை உடைத்து அதிலிருந்த பணத்தை போலீசார் எடுத்துள்ளனர். வங்கிக்கு அருகே எங்களது கணக்காளர் இருந்தபோதே, அவர்களிடமிருந்து பணத்தைக் கைப்பற்றியுள்ளனர். தெலங்கானா ராஷ்டிரிய சமிதி பாஜக மீதான காழ்ப்புணர்ச்சியில் இதனைச் செய்துள்ளது. பாஜக தேர்தல் விதிமுறைகள் எதையும் மீறவில்லை” என்று கிருஷ்ணசாகர் கூறியுள்ளார். அதோடு, விரைவில் தங்களது பணம் திருப்பி அளிக்கப்படுமென்று நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

செவ்வாய், 9 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon