மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 3 ஜூலை 2020

நாகை: சீமான் கூட்டத்தில் சிபிஐ வேட்பாளர்!

நாகை: சீமான் கூட்டத்தில் சிபிஐ வேட்பாளர்!

நாம் தமிழர் கட்சியின் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்ட நாகை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் செல்வராசு, மேடையில் சீமானையும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

தேர்தல் களம் நெருங்க நெருங்க கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வேட்பாளர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். மறுபுறம் பிரச்சாரங்களில் நடைபெறும் சுவாரஸ்யமான சம்பவங்களுக்கும் பஞ்சமில்லை. நாகை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்பாளர் மாலதி, திருவாரூர் இடைத் தேர்தல் வேட்பாளர் வினோதினி ஆகியோருக்கு வாக்கு சேகரித்து, திருவாரூர் பனகல் சாலையில் நேற்று (ஏப்ரல் 8) நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு உரையாற்றினார்.

இந்நிலையில் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு அவ்வழியாகச் சென்ற நாகப்பட்டினம் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்வராசு, சீமான் பேசுவதைக் கேட்டு கூட்டத்திற்கு வந்து இருக்கையில் அமர்ந்து அதனை ஆர்வமுடன் கேட்கத் தொடங்கினார். கூட்டம் முடிந்த பிறகு மேடை ஏறிய செல்வராசு, சீமானுக்கு வாழ்த்து தெரிவித்தார். இருவரும் ஒருவரையொருவர் கட்டித் தழுவி வாழ்த்துக்களைப் பறிமாறிக்கொண்டனர். இந்த சந்திப்பு கூடியிருந்தோர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக செல்வராசு அளித்த பேட்டியில், “துல்லியத் தாக்குதல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து சீமான் பேசியது நன்றாக இருந்தது. அதனால் அவரது பேச்சைக் கேட்க வந்தேன். இது ஒரு எதார்த்தமான நிகழ்வுதான்” என்று தெரிவித்தார்.

ஏற்கனவே மதுரை தொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன், நடைபயிற்சிக்கு வந்த அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் வாக்கு சேகரித்தார். அவரும் போட்டுருவோம் தம்பி என்று சிரித்தபடியே பதிலளித்துச் சென்றார். அரசியல் கொள்கையில் ஆயிரம் மாறுபாடுகள் இருந்தாலும் ஒருவருக்கொருவர் நேரில் சந்தித்துக்கொள்ளும்போது இதுபோன்று வாழ்த்துக்களை தெரிவிப்பதும், நலம் விசாரிப்பது ஆரோக்கியமான அரசியலுக்கு வழிவகுக்கும் என்று கூறுகிறார்கள் அரசியல் ஆர்வலர்கள்.

செவ்வாய், 9 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon