மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 11 டிச 2019

பாலியல் புகார்: பள்ளிக் கல்வித் துறைக்கு உத்தரவு!

பாலியல் புகார்: பள்ளிக் கல்வித் துறைக்கு உத்தரவு!

லாப நோக்கில் தனியாக டியூஷன் எடுக்கும் ஆசிரியர்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், பள்ளி கல்லூரி பல்கலைகழகங்களில் பாலியல் தொல்லைகள் குறித்து புகார் அளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்ணை 8 வாரத்தில் அறிமுகப்படுத்துமாறு பள்ளிக் கல்வித் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட எஸ்ஆர்பி அம்மணி அம்மாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரங்கநாதனை, 2 கி.மீ. தொலைவில் செல்வபுரத்தில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு இடமாற்றம் செய்து மாநகராட்சி ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இன்று (ஏப்ரல் 9) இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆர்.எஸ்.புரம் பள்ளிக்கு மாற்றம் கோரி மல்லிகா என்ற தலைமை ஆசிரியை அளித்த கோரிக்கையை ஏற்று அப்பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்த ரங்கநாதன் இடமாற்றம் செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து, 2 கி.மீ. தொலைவில் உள்ள பள்ளிக்கு இடமாற்றம் செய்ததால் எந்த பாதிப்பும் இல்லை என்று கூறி ரங்கநாதனின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் நீதிபதி.

“அரசிடம் நியாயமான ஊதியம் பெறும் ஆசிரியர்கள், பண லாபத்திற்காக தனியாக டியூசன் எடுக்கிறார்கள். இது விதிமுறைகளுக்கு முரணானது. இது போல் தனியாக டியூசன் எடுக்கும் ஆசிரியர்களைக் கண்காணித்து, விதிகளைப் பின்பற்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசை மிரட்ட, ஆசிரியர்கள் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். இளைய சமுதாயத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த ஆசிரியர்கள் மீது கருணை காட்டாமல் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தன் உரையில் நீதிபதி குறிப்பிட்டார்.

பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் சமீபகாலமாக ஒழுங்கின்மை, சட்ட விரோத நடவடிக்கைகள், பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி,

இது தொடர்பாகப் புகார் அளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்ணை 8 வாரங்களுக்குள் அறிமுகப்படுத்த வேண்டும் என்று தமிழகப் பள்ளிக்கல்வித் துறைக்கு உத்தரவிட்டார்.

“இந்த தொலைபேசி எண்ணை அனைத்துக் கல்வி நிறுவனங்களின் அறிவிப்பு பலகையிலும் இடம்பெறச் செய்ய வேண்டும். புகார் கிடைத்த 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியாக டியூசன் நடத்தும் ஆசிரியர்களுக்கு எதிராகவும், அந்த இலவச தொலைபேசி எண்களில் புகார் அளிக்கலாம். அந்த ஆசிரியர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அனைத்துப் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்” என்று உத்தரவிட்டார் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம்.

தலைமை ஆசிரியர் ரங்கநாதன், தலைமை ஆசிரியர் மல்லிகா ஆகியோர் தாங்கள் பணிபுரியும் பள்ளி வளாகத்தில் 50 மரக்கன்றுகளை நட வேண்டுமென்றும், அவர்கள் மரம் நட்டது தொடர்பாக கோவை மாநகர ஆணையர் அறிக்கை அளிக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டார்.

செவ்வாய், 9 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon