மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 10 ஜூலை 2020

வளங்குன்றா மேம்பாடும், இந்திய மாநிலங்களும்!

வளங்குன்றா மேம்பாடும், இந்திய மாநிலங்களும்!

ஒருபுறம் தமிழ்நாடு, கேரளா முன்மாதிரி மாநிலங்கள் என்று அரசியல் மற்றும் சமூக-பொருளாதார ஆய்வாளர்கள் கட்டுரை எழுதுகிறார்கள். மற்றொரு புறம், திராவிடக் கட்சிகளின் 50 ஆண்டுகால ஆட்சியில் தமிழ்நாடு பின்னோக்கிச் சென்றுவிட்டதாய் தொலைக்காட்சி விவாதங்களிலும், ஒருசில அரசியல் தலைவர்களின் பேச்சுகளிலும் நாம் கேட்கிறோம். இதில் எதுதான் உண்மை?

மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், தமிழ்நாட்டில் பொருளாதாரமும் வளர்ந்து, அதன் பயன்களும் அரசின் முயற்சியால் பரந்துபட்ட மக்களுக்கு சென்று சேர்ந்திருக்கிறது. இதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன. பொருளாதார அறிஞர்கள் அமர்த்தியா சென் மற்றும் ஜான் திரேஸ், An Uncertain Glory: India and its Contradictions எனும் புத்தகத்தில் தமிழ்நாடு கண்டுள்ள பொருளாதார மாற்றங்களைப் பதிவு செய்து, பாராட்டி எழுதியுள்ளனர்.

மனிதவள மேம்பாட்டில் கேரளாவின் சாதனை மகத்தானது. ஊட்டச்சத்து, வறுமைக் குறைப்பு, சிசு இறப்பு விகிதம், படிப்பறிவு போன்ற குறியீடுகளில் மற்ற மாநிலங்களைவிட கேரளா வெகுதூரம் பயணித்திருக்கிறது. இமாச்சல பிரதேசம் மற்றும் தமிழ்நாடு மனிதவள மேம்பாட்டுக் குறியீடுகளில் கேரளத்துடன் உள்ள இடைவெளியைக் குறைக்கும் முயற்சியில் பெருமளவுக்கு வெற்றிபெற்றுள்ளன.

இந்த மூன்று மாநிலங்களின் சாதனையை ஊர்ஜிதப்படுத்தும் விதமாக ஒரு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் ஐக்கிய நாடுகள் சபையின் 17 “வளங்குன்றா மேம்பாட்டு இலக்குகளை” (Sustainable Development Goals) நோக்கிப் பயணிக்க இந்தியா உட்பட 193 நாடுகள் 2015ஆம் ஆண்டு ஒப்புக்கொண்டன. ஒவ்வொரு நாடும், அதன் வெவ்வேறு பகுதிகளும் அந்த இலக்குகளை அடைய எவ்வளவு முயற்சி செய்கிறது என்பதை ஐக்கிய நாடுகள் சபை கவனித்து வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் இந்திய மாநிலங்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்த தரவரிசையில் முதல் மூன்று இடங்களைப் பிடித்திருக்கும் மாநிலங்கள் இமாச்சல பிரதேசம் (69 புள்ளிகள்), கேரளா (68 புள்ளிகள்) மற்றும் தமிழ்நாடு (66 புள்ளிகள்). தரவரிசையின் கடைசி 3 இடங்களில் பிகார், உத்தரப் பிரதேசம் மற்றும் அசாம் உள்ளன. இம்மாநிலங்கள் 50க்கும் குறைவான புள்ளிகளே பெற்றிருப்பதால், அவை மற்ற மாநிலங்களோடு விரைவில் எட்டிப்பிடித்தாக வேண்டும்.

17 இலக்குகளில் 13 இலக்குகளின் அடிப்படையில்தான் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. விடுபட்டுப் போன மற்ற 4 இலக்குகளில் மிக முக்கியமானவை, பருவநிலை மாற்றத்தைத் தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும் சரியான முறையில் இயற்கை வளங்களைப் பயன்படுத்துதல். வளங்குன்றா வளர்ச்சி இருந்தால் மட்டுமே வளங்குன்றா மேம்பாட்டு இலக்குகளை அடைய முடியும் என்பதை முன்னேறிய மாநிலங்களும் மனதில் கொண்டு அதற்கேற்ப செயல்பட வேண்டும். இதுவே வளர்ச்சிப் பாதையில் அவர்கள் சந்திக்கப்போகும் அடுத்த சவாலாக இருக்கும்.

செவ்வாய், 9 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon