மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 7 ஜூலை 2020

ஐபிஎல்: ராகுலின் ஆட்டத்தால் தப்பிய பஞ்சாப்!

ஐபிஎல்: ராகுலின் ஆட்டத்தால் தப்பிய பஞ்சாப்!

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

மொஹாலியில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது.

ஹைதராபாத் அணியில் டேவிட் வார்னர் நிலைத்து நின்று ஆட மற்றொரு தொடக்க வீரரான ஜானி பேர்ஸ்டவ் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். விஜய் ஷங்கரும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. 27 பந்துகளில் 26 ரன்களை எடுத்து அவர் வெளியேறினார். முகம்து நபி 12 ரன்களிலும், மனீஷ் பாண்டே 19 ரன்களிலும் வெளியேற இறுதி நேரத்தில் வார்னருடன் தீபக் ஹோடா இணைந்தார். 3 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர் ஒரு சிக்ஸர், இரண்டு பவுண்டரிகள் என 14 ரன்களை சேர்த்தார். இவருடன் வார்னர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 62 பந்துகளில் 70 ரன்களைச் சேர்த்து களத்தில் இருந்தார். 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு அந்த அணி 150 ரன்களை சேர்த்தது.

151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது கிங்ஸ் லெவன் பஞ்சாப். தொடக்கவீரர்களாக கே.எல்.ராகுலும் கிறிஸ் கெயிலும் களமிறங்கினர். ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடித்த கெயில், ரஷித் கான் பந்தில் 16 ரன்களில் வெளியேறினார். அதன்பின் ராகுல் - மயங்க் அகர்வால் ஜோடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது. இருவரும் அடுத்தடுத்து அரை சதம் கடந்தனர். இறுதி நேரத்தில் மயங்க் அகர்வால் ஆட்டமிழக்க பின்னர் வந்த டேவிட் மில்லர், மந்தீப் சிங் ஆகியோர் முறையே 1, 2, ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் வெற்றியை எளிதாகப் பெறலாம் என்றிருந்த பஞ்சாப் அணிக்கு நெருக்கடி உருவானது. ஆனால் ராகுலின் பக்குவமான ஆட்டத்தால் ஒரு பந்து மீதமிருந்த நிலையில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. ராகுல் 71 ரன்களிலும், சாம் குரன் 5 ரன்களிலும் களத்தில் இருந்தனர்.

வெற்றிக்கு காரணமாக இருந்த ராகுல் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தத் தொடரில் ராகுல் அடித்துள்ள மூன்றாவது அரை சதம் இதுவாகும்.

இன்று நடைபெறவுள்ள ஆட்டத்தில் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை இரண்டாவது இடத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொள்கிறது.

செவ்வாய், 9 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon