மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 9 ஜூலை 2020

கன்டெய்னரில் பணம்?: மக்கள் முற்றுகை!

கன்டெய்னரில் பணம்?: மக்கள் முற்றுகை!

கோவை உக்கடம் அருகே கன்டெய்னரில் பணம் இருப்பதாகத் தகவல் பரவிய நிலையில், அதனைப் பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நேற்று (ஏப்ரல் 9) இரவு 10.30 மணியளவில் கோயம்புத்தூர் மாவட்டம் உக்கடம் ஆற்றுப்பாலம் அருகே ஒரு கன்டெய்னர் அதிவேகத்தில் சென்றது. தறிகெட்டு ஓடியதால், அப்பகுதி மக்கள் கன்டெய்னரைத் தடுத்து நிறுத்தி முற்றுகையிட்டனர். கூட்டத்தில் இருந்தவர்களில் சிலர், ஓட்டுநர் பிரகாஷிடம் கேள்விகள் கேட்டனர். அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்ததால், அங்கிருந்த மக்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. இதனால், கன்டெய்னரில் கட்டுக்கட்டாக பணம் இருக்கக்கூடும் என்று தகவல் பரவியது. இதையடுத்து, கன்டெய்னர் நிறுத்தப்பட்ட இடத்தில் ஏராளமான மக்கள் குவியத் தொடங்கினர். இதனால் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தகவல் கிடைத்து, சம்பவ இடத்துக்குத் தேர்தல் பறக்கும் படையினரும் போலீசாரும் சென்றனர். போலீசார் வலியுறுத்திச் சொன்னபோதும், அங்கிருந்த மக்கள் கன்டெய்னரில் பணம் இருப்பதை உறுதி செய்ய வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தனர். அங்கு வந்த கோவை மாநகரக் காவல் ஆணையரும், அங்கு கூடியிருந்த மக்களிடம் விசாரணைக்கு இடையூறு செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். இதையும் மீறிக் கட்டுக்கடங்காத வகையில் கூட்டம் பெருகியதால், அங்கு போலீசார் தடியடி நடத்தினர்.

அதே நேரத்தில் கன்டெய்னர் ஓட்டுநர் பிரகாஷிடம் தேர்தல் பறக்கும் படையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அந்த கன்டெய்னர் தாராபுரத்தில் உள்ள ஒரு தொழிலதிபருக்குச் சொந்தமானது என்றும், அவருக்குச் சொந்தமான நிறுவனத்தின் சார்பாக லாரியில் டீத்தூள் மூட்டைகள் ஏற்றப்பட்டன என்றும் அவர் தெரிவித்தார். ஜெர்மனி நாட்டுக்கு ஏற்றுமதி செய்வதற்காக வெள்ளக்கிணறில் இருந்து அவை கொச்சி கொண்டுசெல்லப்படுவதாகவும் கூறினார் பிரகாஷ். இதைத் தொடர்ந்து, கன்டெய்னரைத் திறந்து அதிலிருந்த மூட்டைகளில் டீத்தூள் இருப்பதை பிரித்துக் காட்டினார்.

இதன்பின்னரும், அங்கிருந்த மக்கள் அனைத்து மூட்டைகளையும் பிரித்துப் பார்க்க வேண்டுமென்று வலியுறுத்தினர். இதையடுத்து, அனைத்து மூட்டைகளும் பிரிக்கப்பட்டன. அதில் டீத்தூள் மட்டுமே இருந்தது உறுதி செய்யப்பட்டது. 2016 சட்டமன்றத் தேர்தலின்போது 3 கன்டெய்னர்களில் கட்டுக்கட்டாகப் பணம் இருப்பது கண்டறியப்பட்டது. அந்த தகவல் ஏற்படுத்திய தாக்கமே, இந்த கன்டெய்னரில் பணம் இருப்பதாகத் தகவல் பரவியதற்குக் காரணம் என்றனர் அங்கிருந்த மக்களில் சிலர்.

அனைத்து மூட்டைகளையும் பிரித்ததால், இதனை ஏற்றுமதி செய்யக் கொண்டுசெல்வது கடினம் என்று தெரிவித்தார் ஓட்டுநர் பிரகாஷ்

செவ்வாய், 9 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon