மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 26 செப் 2020

விரைவில் பிரச்சாரம்: விஜயகாந்த் பேட்டி!

விரைவில் பிரச்சாரம்:  விஜயகாந்த் பேட்டி!

விரைவில் பிரச்சாரத்தில் கலந்துகொள்ள உள்ளதாக தெரிவித்த விஜயகாந்த், 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணிதான் வெற்றிபெறும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்க, கடந்த தேர்தல்களில் ஸ்டார் பேச்சாளராக இருந்து சூறாவளி சுற்றுப் பயணத்தில் ஈடுபட்ட தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த், உடல்நலக் குறைவால் வீட்டிலிருந்தபடி ஓய்வெடுத்துவருகிறார். விஜயகாந்த் பிரச்சாரத்துக்கு வருவார், ஆனால் பேசமாட்டார் என்று தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ் தெரிவித்திருந்தார். அத்தனை தலைவர்கள் வந்து பேசினாலும், தங்கள் தலைவர் எப்போது பிரச்சாரத்திற்கு வருவார் என்பது தேமுதிக தொண்டர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக இருந்தது.

இந்த நிலையில் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுவந்த பிறகு முதல் முறையாக தற்போது பேட்டியளித்துள்ளார் விஜயகாந்த். பிரத்தியேகமாக எடுக்கப்பட்ட அந்த பேட்டியின் வீடியோவை, தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

உடல்நிலை, பிரச்சாரம் தொடர்பாக செய்தியாளர் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் அவர், “நான் நன்றாக இருக்கிறேன். அமெரிக்கா சென்றுவந்த பிறகு எனது உடல்நிலையும் நன்றாக இருக்கிறது. கூடிய விரைவில் நான் பிரச்சாரத்தில் கலந்து கொள்வேன். என்ன பேசுவேன் என்பதை அங்குவந்து கேட்கச் சொல்லுங்கள். மருத்துவரின் அறிவுரையின் படி தொடா்ந்து பிரச்சாரங்களில் பங்கேற்பேன்” என்கிறார்.

அதனைத் தொடர்ந்து கூட்டணி தொடர்பாக பேசும் விஜயகாந்த், “தமிழகத்தில் அதிமுக கூட்டணி தான் வெற்றி பெறும். திமுக கூட்டணி தோற்கும். திமுக என்றாலே தில்லு முல்லு கட்சி என்று தான் அா்த்தம். அதிமுக கூட்டணிக்கும், திமுக கூட்டணிக்கும் இடையேயான போட்டி என்பது, தா்மத்திற்கும், அதா்மத்திற்கும் இடையே நடைபெறும் போட்டி. இதில் தா்மம் தான் வெற்றி பெறும். மோடி நல்லவா், அவா் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும்” என்று பதிலளித்தார்.

மேலும், “நல்லா உழைக்க வேண்டும்; 40-ம் ஜெயிக்க வேண்டும்” என்று தேமுதிக தொண்டர்களுக்கு அறிவுரையும் வழங்கினார்.

அதிமுக-தேமுதிக கூட்டணி ஒப்பந்தத்தின்போது கிரவுன் பிளாசா ஹோட்டலுக்கு வந்த விஜயகாந்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, அதற்கு தன்னால் பேச இயலாது என்று சைகையில் பதிலளித்தார் விஜயகாந்த். அதன்பிறகு வெளிநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாத விஜயகாந்த், டிவிட்டரில் மட்டும் தொடர்ந்து பதிவுகளை இட்டுவந்தார். இந்த நிலையில் வெளிநாட்டு சிகிச்சைக்கு பின்பு முதல்முறையாக விஜயகாந்தின் குரலைக் கேட்ட தேமுதிக தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

செவ்வாய், 9 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon