மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 26 செப் 2020

கேரளா: மூத்த அரசியல்வாதி மாணி மறைவு!

கேரளா: மூத்த அரசியல்வாதி மாணி மறைவு!

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக கேரள அரசியல் களத்தின் போக்கைத் தீர்மானிப்பவர்களில் ஒருவராகவும், 13 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த கேரள காங்கிரஸ் (எம்) தலைவர் கே.எம்.மாணி இன்று மாலையில் மரணமடைந்தார். அவரது வயது 86.

நீண்ட நாட்களாக சுவாசக் கோளாறினால் அவதிப்பட்டு வந்தார் கே.எம்.மாணி. இதற்காக, அவருக்குத் தொடர்ச்சியாகச் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. கடந்த வாரம் அவருக்கு எர்ணாகுளம் லேக்‌ஷோர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று மாணி மரணமடைந்தார்.

13 முறை எம்எல்ஏ

சுமார் 52 ஆண்டுகளாக கேரள சட்டமன்றத்துடன் நெருக்கமான உறவைக் கொண்டவர் கே.எம்.மாணி. நீண்டகாலமாக சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு. ஆரம்ப காலத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் ஆர்வம் கொண்டவராக இருந்தார். அதன்பின், கே.எம்.ஜார்ஜ் தலைமையில் கேரள காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டபோது, அதில் இணைந்தார். 1965ஆம் ஆண்டு முதல்முறையாக கேரள காங்கிரஸ் கட்சி சார்பில், பலா என்ற தொகுதியில் இருந்து அவர் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின், 2016ஆம் ஆண்டு கேரளாவில் நடந்த சட்டமன்றத் தேர்தல் வரை 13 முறை தொடர்ச்சியாக பலா தொகுதியில் இருந்து மாணி தேர்ந்தெடுக்கப்பட்டது மிகப்பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது.

காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகித்து வரும் கேரள காங்கிரஸ் (எம்), கடந்த 40 ஆண்டுகளாக கேரள அரசியலின் போக்கைத் தீர்மானித்து வருகிறது. காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளுக்கு அடுத்தபடியாக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது இக்கட்சி. திருவாங்கூர், கோட்டயம் வட்டாரத்தில் உள்ள கிறிஸ்தவ மக்களிடையே கேரள காங்கிரஸ் (எம்) கட்சிக்கு செல்வாக்கு உண்டு. தற்போது இக்கட்சியின் சார்பில் 6 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். மாணியின் மகன் ஜோஸ், தற்போது மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி வகித்து வருகிறார்.

ஊழல் வழக்கு

2014ஆம் ஆண்டு கேரளாவிலுள்ள பார்களின் உரிமங்களை புதுப்பிக்கும் விவகாரத்தில் ரூ.1 கோடி லஞ்சமாகப் பெற்றதாக மாணி மீது குற்றம்சாட்டப்பட்டது. இதனால், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முன்னேற்றக் கூட்டணியில் கேரள காங்கிரஸ் (எம்) இடம் குறித்த கேள்வி எழுந்தது. காங்கிரஸ் கட்சியினர் தன்னைப் புறக்கணிப்பதாகக் குற்றம்சாட்டி, அதிலிருந்து விலகினார் மாணி.

கடந்த ஜூன் மாதம் மீண்டும் காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்தார். கடந்த செப்டம்பர் மாதம் பார் உரிமம் தொடர்பான வழக்கில் மாணியை விடுவித்தது திருவனந்தபுரம் நீதிமன்றம்.

இரங்கல்

கே.எம்.மாணி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உட்படப் பல அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய், 9 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon