மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 12 ஜூலை 2020

மே 19: 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!

மே 19: 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!

தமிழகத்தில் காலியாகவுள்ள திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கு மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவை மற்றும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. 22 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் முதலில் 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தல் வழக்குகளைக் காரணம் காட்டி திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளுக்குத் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதற்கிடையில் இந்த தொகுதிகள் தொடர்புடைய வழக்குகளில் தீர்ப்பு வழங்கியும். மனுவைத் தள்ளுபடி செய்தும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து 18 தொகுதிகளோடு மீதமுள்ள தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என்று திமுக சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூவிடமும், இந்தியத் தேர்தல் ஆணையத்திலும் மனு கொடுத்த திமுக உச்ச நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்தது.

22 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் நிச்சயம் இந்த ஆட்சி கவிழும் என்று திமுக தலைவர் ஸ்டாலினும், எத்தனை ஸ்டாலின் வந்தாலும் ஆட்சியை கலைக்க முடியாது என்று தமிழக முதல்வரும் குற்றம்சாட்டி வந்தனர்.

இதற்கிடையில் ஏப்ரல் 2ஆம் தேதி தமிழகம் வந்திருந்த தேர்தல் ஆணையர்கள் திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தியதாகவும், இதுதொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்துச் சென்றனர்.

இந்த நிலையில் இன்று (ஏப்ரல் 9), 4 தொகுதிகளுக்கும் வரும் மே 19ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வேட்புமனுத் தாக்கல் ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெறும். 30ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறும். மே 2ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்பப்பெற கடைசி நாளாகும். மே 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, மே 23ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்று தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 9 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon