மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 10 டிச 2019

இரும்புத்திரை 2: சைபர் கிரைமைத் தடுக்கும் விஷால்

இரும்புத்திரை 2: சைபர் கிரைமைத் தடுக்கும் விஷால்

விஷால் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற இரும்புத்திரை திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கியுள்ளது.

விஷால் நடிப்பில் வெளியான படங்கள் தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வந்தபோது அறிமுக இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சைபர் கிரைம் தொடர்பாக உருவான இரும்புத்திரை திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. சமந்தா கதாநாயகியாக நடித்த அந்தப் படத்தில் ரோபோ ஷங்கர், டெல்லி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அர்ஜுன் பிளாக் டெவில் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தார். படத்தின் முடிவில் அர்ஜுன் கைது செய்யப்பட்டபின் ஒயிட் டெவில் என்ற புதிய பெயரில் மீண்டும் சைபர் குற்றங்களில் ஈடுபடுவதாக காட்டப்பட்டிருக்கும். இரண்டாவது பாகத்துக்கான ஏற்பாடாகவே அதன் முடிவு பார்க்கப்பட்டது.

படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் போதே இரும்புத்திரை 2 கண்டிப்பாக உருவாகும் என கூறப்பட்டது. தற்போது இப்படத்தின் பணிகள் ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றன. பி.எஸ்.மித்ரன் தற்போது சிவகார்த்திகேயனை கதாநாயகனாகக் கொண்டு ஹீரோ படத்தை இயக்கிவரும் நிலையில் இப்படத்தை அறிமுக இயக்குநர் ஆனந்த் இயக்குகிறார். இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள். தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரம் விரைவில் வெளியாகவுள்ளது.

விஷால் தற்போது சுந்தர் சி இயக்கத்தில் பெயரிடப்படாத புதிய படத்தில் நடித்துவரும் நிலையில் ஒரு மாதத்தில் விஷால் படக்குழுவுடன் இணையவுள்ளார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார்.

விஷால், ராஷி கண்ணா இணைந்து நடித்துள்ள அயோக்யா திரைப்படம் மே 10ஆம் தேதி வெளியாகவுள்ளது.

செவ்வாய், 9 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon