மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 4 ஜூலை 2020

ரூ.100 கோடி அபராதம்: தடை விதித்த உயர் நீதிமன்றம்!

ரூ.100 கோடி அபராதம்: தடை விதித்த உயர் நீதிமன்றம்!

சென்னையில் ஓடும் நதிகளை பராமரிக்கத் தவறியதாகத் தமிழக அரசுக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

சென்னையில் ஓடும் கூவம், அடையாறு நதிகளையும், பக்கிங்ஹாம் கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகளையும் பராமரிக்கத் தமிழக அரசு தவறிவிட்டதாக, ஜவஹர்லால் சண்முகம் என்பவர் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவொன்றைப் பிறப்பித்தது. கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாயைத் தூர் வாரிப் பராமரிக்காமல் விட்டதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டதென்று தெரிவித்த பசுமைத் தீர்ப்பாயம், இதற்குக் காரணமான தமிழகப் பொதுப்பணித் துறைக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.

கடந்த ஏப்ரல் 23ஆம் தேதியன்று, இந்த வழக்கு விசாரணையில் நேரில் ஆஜராகுமாறு தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கு உத்தரவிட்டது தீர்ப்பாயம். சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆராயவும், மறுசீரமைப்பு நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும் மத்திய, மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்கள், இந்திய அறிவியல் கழகம் (IASE), நீரி (NEERI) அமைப்பு, மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் எக்னாமிக்ஸ் ஆகிய நிறுவனங்களில் இருந்து தலா ஒருவர் அடங்கிய குழுவை நியமித்து 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமெனவும் உத்தரவிட்டது.

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் அபராத உத்தரவை எதிர்த்து, தமிழக பொதுப்பணித் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இன்று (ஏப்ரல் 9) இந்த மனு நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாயை பராமரிக்க மேற்கொண்ட நடவடிக்கைகளைக் கருத்தில் கொள்ளாமலும், கூவம் நதியைச் சுத்தப்படுத்த 604 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுப் பணிகள் நடந்து வருவதைக் கருத்தில் கொள்ளாமலும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே, பசுமைத் தீர்ப்பாயம் 2 கோடி ரூபாய் அபராதம் விதித்து பிறப்பித்த உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளதையும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தனர். இந்த மனுவுக்குப் பதிலளிக்குமாறு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்துக்கும், வழக்கு தொடர்ந்த ஜவகர்லால் சண்முகத்துக்கும் உத்தரவிட்டனர் நீதிபதிகள்.

செவ்வாய், 9 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon