மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 13 ஜூலை 2020

ஆர்எஸ்எஸ் தலைவர் படுகொலை: காஷ்மீரில் பதற்றம்!

ஆர்எஸ்எஸ் தலைவர் படுகொலை: காஷ்மீரில் பதற்றம்!

மாநில ஆர்எஸ்எஸ் தலைவர் சந்திரகாந்த் சிங் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவத்தால் காஷ்மீரில் மீண்டும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தின் ஆர்எஸ்எஸ் தலைவராக இருப்பவர் சந்திரகாந்த் சிங். இவர் இன்று (ஏப்ரல் 9) தனது பாதுகாப்பாளருடன் கிஷ்ட்வார் மருத்துவமனைக்கு சென்றபோது, அவரை பின் தொடர்ந்து வந்த தீவிரவாதி ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இச்சம்பவத்தில் இருவரும் குண்டடி பட்டனர். இதில் சந்திரகாந்த் சிங்கின் பாதுகாவலர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உயிருக்குப் போராடிய நிலையில் சந்திரகாந்த் சிங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

ஆனால் சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்துவிட்டார். இதனால் காஷ்மீர் மாநிலத்தில் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது. கிஷ்ட்வாரில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்து கிஷ்ட்வார் மாவட்ட மாஜிஸ்திரேட் ஆங்ரேஸ் சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கிஷ்ட்வார் நகர்ப் பகுதியில் நிலைமையைக் கட்டுக்குள் வைக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்றார்.

துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் சந்திரகாந்த் சிங் உயிரிழந்துவிட்டதை பாஜக செய்தித் தொடர்பாளர் அருண் குப்தா கிரேட்டர் காஷ்மீர் ஊடகத்திடம் பேசுகையில் உறுதிப்படுத்தியுள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இணையதள சேவைகளும் அங்கு முடக்கப்பட்டுள்ளன.

செவ்வாய், 9 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon