மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 13 ஜூலை 2020

காஞ்சிபுரம்: “இன்னா செய்துக்குறே நீ?”- மரகதத்தை மறித்த மக்கள்!

காஞ்சிபுரம்:   “இன்னா செய்துக்குறே நீ?”-  மரகதத்தை மறித்த மக்கள்!

அதிமுகவின் 37 எம்.பி.க்களில் மொத்தம் 6 பேருக்குத்தான் திரும்பவும் இந்த மக்களவைத் தேர்தலில் வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. அந்த 6 பேரில் ஒருவர் காஞ்சிபுரம் மக்களவை உறுப்பினரான மரகதம் குமரவேல்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொடுக்கப்பட்ட உளவுத்துறை தகவல்களின்படி மரகதம் குமரவேலுக்கு மீண்டும் சீட் கொடுக்க வேண்டாம் என வற்புறுத்தப்பட்டது. ஆனால் மாசெக்கள் எல்லாம் சேர்ந்து மீண்டும் மரகதத்துக்கே கொடுக்கலாம் என்று வற்புறுத்தியதை அடுத்து அவருக்கே சீட் கொடுத்தார் எடப்பாடி. திமுக சார்பில் மீண்டும் செல்வம் இங்கே போட்டியிடுகிறார்.

இப்போது மரகதம் குமரவேலுக்கு சென்ற இடமெல்லாம் எதிர்ப்பு நிலவுவதால் காஞ்சி தொகுதி அதிமுக நிர்வாகிகள் கலக்கத்தில் இருக்கிறார்கள்.

கிழக்குக் கடற்கரைச் சாலையை ஒட்டிய செய்யூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட செய்யூர், லத்தூர், நீலமங்கலம், மலையம்பாக்கம், வடக்கு செய்யூர், மேற்கு செய்யூர் ஆகிய கிராமங்களுக்கு நேற்றும், நேற்று முன் தினமும் வாக்கு சேகரிக்கப் போயிருக்கிறார் மரகதம் குமரவேல்.

திறந்த வாகனத்தில் மரகதம் குமரவேல் நின்றுகொண்டிருக்க, ‘அன்புத் தாய்மார்களே... நூறு நாள் வேலையை இருநூறு நாளாக மாற்றித் தர இதோ வந்துகொண்டிருக்கிறார் உங்கள் வேட்பாளர்” என்று அறிவித்துக் கொண்டே செய்யூரில் வாகனம் வர... திமுதிமுவென பத்து முதல் இருபது பெண்கள் அந்த வாகனத்துக்கு முன் நின்றனர்.

’என்னாம்மா... அஞ்சு வருசத்துக்கு முன்னாடி ஜெயிச்சு போனியே... அப்பொலேர்ந்து இன்னா செய்துக்குறே நீ? இன்னா செய்துக்குறே நீ? நூறு நாள் வேலை அதுஇதுனு சொல்றியே. சொல்லு, யாருக்கு இன்னா செய்துக்குறே நீ? எப்படி நீ ஓட்டுக்கேட்டு வர்றே?” என்று ஓங்கிக் குரல் எழுப்பினார்கள்.

‘இந்தப் பகுதிக்கு வந்து.... நான் லைட் கொடுத்திருக்கேன். மத்திய அரசை அணுகி கோரிக்கைகளை எடுத்துட்டு போயி சாலைகள் போட்டுக் கொடுத்திருக்கேன். செய்யூர்ல குள வேலை கொடுத்திருக்கேன். ஒரு எம்.பி.க்கு வந்து ஒரு வருசத்துக்கு 5 கோடிதான். ஆறு சட்டமன்றத் தொகுதி இருக்கு. உங்களை மாதிரி ஆறு சட்டமன்றத் தொகுதிக்கும் நான் செய்யணும். நான் உள்ளாட்சி கிடையாது. உள்ளாட்சியில இருக்குற தலைவரோ, கவுன்சிலரோ கிடையாது நானு.

தலைவர் வந்துதான் அடிப்படை வசதிகளை செஞ்சு கொடுக்கணும். திராவிட முன்னேற்றக் கழகத்தினர் கோர்ட்டுக்கு போய் ஸ்டே வாங்கிட்டாங்க. அதனாலதான் தேர்தல் நடத்தல ,உள்ளாட்சித் தேர்தல் நடத்தல” என்று மரகதம் பேச, எம்பியின் வாகனம் ஹார்ன் அடித்துக் கொண்டே இருந்தது. மக்களும் தொடர்ந்து கேள்விகேட்டுக்கொண்டே இருக்க வேகமெடுத்து அடுத்த ஊரை நோக்கிச் சென்றது எம்பியின் வாகனம்.

பிரச்சார வாகனம் சென்றபின் அதிமுக நிர்வாகிகள் கேள்விகேட்ட பெண்களை, ‘யாரு தெரியுமா அவங்க. எம்பிய கேட்குறியா நீ?” என்றபடியே நெருங்க மற்ற கிராம மக்களும் சேர்ந்து கொண்டதால் தாக்காமல் விட்டுச் சென்றுவிட்டனர்.

இதுபோல் பல இடங்களில் மரகதம் குமரவேலுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. மரகதத்தின் கணவரான குமரவேல் திருப்போரூர் அதிமுக ஒன்றிய செயலாளராக இருக்கிறார். சில நாட்கள் முன்பு தனது சொந்த ஊரான தையூரில் ஊர் மக்கள், முக்கியஸ்தர்களை எல்லாம் கூட்டியிருக்கிறார். நாலாயிரம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்த்தவருக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் வெறும் 400 பேர் மட்டுமே கூடியிருக்கிறார்கள்.

இதை எதிர்பார்க்காத குமரவேல், “நான் உங்களுக்கு என்ன பாவம்செஞ்சேன்? மறுபடியும் நம்ம ஊருக்கு எம்பியாகுற வாய்ப்பு வந்திருக்கு. அது உங்களுக்கு பொறுக்கலையா?” என்று தேம்பித் தேம்பி ஊர் மக்கள் முன்னிலையில் அழுதாராம். மரகதம் குமரவேலுக்கு பல இடங்களில் எதிர்ப்பு வலுத்து வருவது பற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் தகவல் போயிருக்கிறது.

ஏன் இவ்வளவு எதிர்ப்பு என்று நாம் தொகுதிக்குள் விசாரித்தபோது, “மரகதம் குமரவேல் தனது எம்பி நிதியில் இருந்து பள்ளிக் கட்டிடங்களோ, சமுதாயக் கூடங்களோ, மருத்துவமனைகளோ கண்ணுக்குத் தெரிகிற மாதிரி கட்டிக் கொடுக்கவில்லை. லைட் போடுவதும், பள்ளிகளுக்கு இரும்பு டேபிள், சேர்கள் கொடுப்பதுமே தன் வேலை என்ற மாதிரி தொகுதி முழுதும் இந்த இரு விஷயங்களையே செய்திருக்கிறார். அதிலும் பலத்த கமிஷன் வாங்கிவிட்டார் என்று சில வருடங்களாகவே தொகுதிக்குள் பேச்சு இருக்கிறது. இந்த நிலையில் அவர் எம்பி யாக இருந்தார் என்பதற்கான பெரிய அடையாளம் எதுவும் இல்லாததால் மக்கள் அவர் மீது கோபத்தில் இருக்கிறார்கள்” என்கின்றனர் பொதுமக்கள்.

செவ்வாய், 9 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon