மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 15 ஜூலை 2020

மது வருவாய்க்கு மாற்று: அரசு பதிலளிக்க உத்தரவு!

மது வருவாய்க்கு மாற்று: அரசு பதிலளிக்க உத்தரவு!

மதுக்கடைகளை மூடினால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட தமிழக அரசிடம் வேறு திட்டம் உள்ளதா என்பது குறித்து பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.

தஞ்சாவூரைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார். தஞ்சாவூரில் பள்ளி அக்ரகாரம் பேருந்து நிலையம் அருகில் டாஸ்மாக் கடை அமைப்பதற்கான நடவடிக்கைக்கு இந்த மனுவில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. “அங்கு டாஸ்மாக் கடை செயல்படும்பட்சத்தில் பொதுமக்கள், மாணவர்கள், பயணிகள், வாகன ஓட்டிகள் என அனைவருக்கும் இடையூறாக அமையும். எனவே டாஸ்மாக் கடை தொடங்க தடை விதிக்க வேண்டும்” என்று மகேந்திரன் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதேபோல, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

நேற்று (ஏப்ரல் 8) இந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 2016ஆம் ஆண்டு 500 கடைகள், 2017ஆம் ஆண்டு 500 கடைகள், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தேசிய நெடுஞ்சாலைகளிலிருந்த 500 கடைகள் என்று இதுவரை 1,500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

“2004ஆம் ஆண்டில் 7,896 கடைகள் இருந்தன. ஆனால், கடந்த பிப்ரவரி மாத நிலவரப்படி 5,239 டாஸ்மாக் கடைகள் தற்போது செயல்பட்டு வருகின்றன. டாஸ்மாக் கடைகளை படிப்படியாகக் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், “டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் அறிக்கை ஏற்கத்தக்கதல்ல. அரசின் முடிவுகள் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட வேண்டும்.

டாஸ்மாக் கடைகளை மூடினால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட புதிய வரிகளை ஏற்படுத்துவது போன்ற வேறு திட்டம் எதுவும் தமிழக அரசிடம் உள்ளதா? இது பற்றி தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.

இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை வரும் ஏப்ரல் 23ஆம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டது.

செவ்வாய், 9 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon