மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 10 ஜூலை 2020

மகளுக்குத் திருமணம்: பரோல் கேட்கும் நளினி

மகளுக்குத் திருமணம்: பரோல் கேட்கும் நளினி

மகள் திருமண ஏற்பாடுகளை கவனிக்க ஆறு மாதம் பரோல் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ள நளினி, அந்த மனு மீதான விசாரணைக்கு தானே நேரில் ஆஜராகி வாதிட அனுமதிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில், குற்றம்சாட்டப்பட்டவரான நளினி கடந்த 27 ஆண்டுகளாக ஆயுள் கைதியாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நளினியின் மகள் ஆரித்ரா லண்டனில் வசித்து வருகிறார். ஆரித்ராவுக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், மகளின் திருமண ஏற்பாடுகளைக் கவனிக்க ஆறு மாதங்கள் பரோல் வழங்கக் கோரி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், தனது தூக்கு தண்டனை 2000ஆம் ஆண்டு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்ட பின், இதுவரை, 10 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்த 3,700 ஆயுள் கைதிகளைத் தமிழக அரசு விடுதலை செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

ஆயுள் கைதிகளுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு மாதம் பரோல் வழங்கச் சிறை விதிகள் வகை செய்துள்ள போதிலும், 27 ஆண்டுகளாக தனக்கு பரோல் வழங்கப்படவில்லை எனவும் மனுவில் கூறியுள்ளார். மேலும், இந்த மனு மீதான விசாரணைக்கு தானே நேரில் ஆஜராகி வாதிட அனுமதிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பரோல் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்த நளினி, பின் அதைத் திரும்பப் பெற்றார். கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி, தங்களை விடுவிக்கக் கோரி சிறையில் நளினியும், முருகனும் உண்ணாவிரதம் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 9 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon