மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 11 ஜூலை 2020

கரூர்: 45 கல்லூரிகள் - தம்பிதுரை சவால்!

கரூர்: 45 கல்லூரிகள் - தம்பிதுரை சவால்!

கரூர் தொகுதி மக்களிடையே தனக்குச் சொந்தமாக 45 கல்லூரிகள் இருப்பதாகப் பொய் பிரச்சாரத்தில் ஸ்டாலின் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளார் தம்பிதுரை.

கரூர் தொகுதியில் அதிமுக சார்பில் தற்போதைய மக்களவை உறுப்பினரும் மக்களவை துணை சபாநாயகருமான மு.தம்பிதுரை போட்டியிடுகிறார். காங்கிரஸ் சார்பில் எஸ்.ஜோதிமணியும் அமமுக சார்பில் என்.தங்கவேலுவும், மக்கள் நீதி மய்யம் சார்பில் ஹரிஹரனும், நாம் தமிழர் கட்சி சார்பில் கருப்பையாவும் போட்டியிடுகின்றனர்.

கடந்த வாரம் இத்தொகுதியில் பிரச்சாரம் செய்ய வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மோடியிடம் சண்டையிட்டு தொகுதிக்கு நல்லது செய்வேன் என்ற தம்பிதுரை இத்தொகுதிக்காக என்ன செய்திருக்கிறார் என்று மக்களிடம் கேள்வி எழுப்பினார். அவருக்குச் சொந்தமாக 45 கல்லூரிகள் இருப்பதாகக் குற்றம்சாட்டினார். அமமுகவில் இருந்து விலகி சமீபத்தில் திமுகவில் இணைந்த கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் செந்தில் பாலாஜி, கடந்த சில நாட்களாகத் தன் பிரச்சாரத்தில் தம்பிதுரைக்குச் சொந்தமாகக் கல்லூரிகள் இருப்பதாகக் குறிப்பிட்டு வருகிறார்.

இந்நிலையில், இன்று (ஏப்ரல் 9) கரூர் தொகுதிக்கு உட்பட்ட இலுப்பூர், நவம்பட்டி பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டார் தம்பிதுரை. அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ஸ்டாலின் தன் மீது அபாண்டமாகக் குற்றம்சாட்டுவதாகக் கூறினார். என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபணம் செய்ய முடியுமா என்றும் ஸ்டாலினுக்கு சவால் விடுத்தார்.

“அவர் (ஸ்டாலின்) கரூரில் பேசியதை, ஊர் ஊராக செந்தில் பாலாஜியும் ஜோதிமணியும் பேசிக் கொண்டிருக்கின்றனர். எனக்குச் சொந்தமாக 45 கல்லூரிகள் இருப்பதை அவர் நிரூபித்தால், நான் அரசியலை விட்டு விலகத் தயார். ஆனால், அவர் தயாராக இருக்கிறாரா? தோல்வி பயத்தினால் ஏதேதோ சொல்லிக் கொண்டிருக்கிறார்.

நான் வெற்றி பெறுவது உறுதி. ஆனாலும், மக்களிடையே என் மீது தவறான எண்ணத்தை உருவாக்கும் வகையில் தவறாகப் பேசி வருகிறார். தேர்தலுக்கு முன்போ அல்லது தேர்தல் முடிந்தபின்போ, அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன்” என்று செய்தியாளர்களிடம் கூறினார் தம்பிதுரை.

செவ்வாய், 9 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon