மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 10 ஜூலை 2020

கலைஞர் சிகிச்சை: முதல்வருக்கு திருச்சி சிவா பதில்!

கலைஞர் சிகிச்சை: முதல்வருக்கு திருச்சி சிவா பதில்!

கலைஞரை வெளிநாட்டு சிகிச்சைக்கு அழைத்துச் செல்லவில்லை என்று கூறும் முதல்வர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை ஏன் வெளிநாட்டு சிகிச்சைக்கு அழைத்துச் செல்லவில்லை என்று திருச்சி சிவா கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் தான் பிரச்சாரம் செல்லும் இடங்களிலெல்லாம் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கொடநாடு விவகாரம், ஜெயலலிதா மரண மர்மம், பொள்ளாச்சி விவகாரம் குறித்து விசாரித்து குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுவருகிறார்.

இந்த நிலையில் குன்னூரில் நேற்று நடந்த பிரச்சாரத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “கருணாநிதி நன்றாக இருந்தால் தான் தலைவராக முடியாது என்று எண்ணிய ஸ்டாலின், அவருக்கு உரிய சிகிச்சை அளிக்காமல் 2 வருடங்கள் வீட்டிலேயே சிறை வைத்திருந்தார். கருணாநிதிக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளித்திருந்தால் நன்றாகப் பேசியிருப்பார். கருணாநிதி வீட்டில் சிறை வைக்கப்பட்டது குறித்து விசாரிக்கப்படும்” என்று தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக சேலத்தில் இன்று (ஏப்ரல் 9) செய்தியாளர்களிடம் பேசிய திமுக கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவா, “முதல்வர் தனது பொறுப்பை மறந்து எல்லை மீறிப் பேசிக்கொண்டிருக்கிறார். 95 வயதான எங்கள் தலைவரை ஏன் வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லவில்லை என்று கேட்கும் அவர், 65 வயதான அவருடைய தலைவர் ஜெயலலிதாவை ஏன் வெளிநாட்டு சிகிச்சைக்கு அழைத்துச் செல்லவில்லை. அவரை ஏன் மருத்துவமனையில் அடைத்துவைத்தனர். எங்கள் தலைவர் குறித்து முதல்வர் பேசியது வரம்பு மீறிய பேச்சு. எங்களால் அதனை தாங்கிக்கொள்ள முடியவில்லை” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, “ஜெயலலிதா மருத்துவமனைக்குச் செல்லும் வரை எடப்பாடி பழனிசாமி என்று ஒரு அமைச்சர் இருக்கிறார் என்றே மக்களுக்குத் தெரியாது. காலச்சூழலால் முதல்வர் ஆகிவிட்டார். முதல்வர் பொறுப்பை வைத்து தமிழகத்திற்கு என்ன செய்தீர்கள் என்று கேட்டால் கலைஞரை வீட்டில் அடைத்துவைத்தார்கள், சிறையில் வைத்தார்கள், வெளிநாட்டுக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்லவில்லை என்றெல்லாம் பேசுகிறார்” என்றும் விமர்சித்தார்.

“95 வயது வரை இருந்த எங்கள் தலைவரை மரியாதைக் குறைவாக பெயர் சொல்லி அழைக்கிற இவருக்கு எங்கள் மீது கரிசனமா?” என்று கேள்வி எழுப்பிய அவர்,

இதெல்லாம் அபாண்டமாக குற்றச்சாட்டு. நாங்கள் அனைத்தையும் வெளிப்படையாகவே செய்திருக்கிறோம். மருத்துவமனையில் கலைஞரை குடியரசு துணைத் தலைவர், ஆளுநர், முதல்வர், துணை முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர் என அனைவரும் வந்து பார்த்துள்ளனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை யார் பார்த்தார்கள்? கண்ணாடி வழியாகக் கூட பார்க்க அனுமதிக்கவில்லை.கலைஞருக்காக சாகத் தயாராக இருந்தவர்கள்தான் திமுகவில் இருந்தோமே தவிர, அவரை அடைத்துவைத்து ஆதாயம் தேட முயன்றவர்கள் யாரும் இல்லை” என்றும் முதல்வருக்கு காட்டமாக பதிலளித்துள்ளார் திருச்சி சிவா

செவ்வாய், 9 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon