மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 15 ஆக 2020

100 கோடி: மீண்டும் நிரூபித்த மோகன்லால்

100 கோடி: மீண்டும் நிரூபித்த மோகன்லால்

மோகன்லால் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லூசிஃபர்’ திரைப்படம், எட்டே நாட்களில் நூறு கோடி வசூலைத் தொட்டு மலையாளத் திரையுலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்திய சினிமாவில் நூறு கோடி கிளப் என்பது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. அந்த வகையில் வர்த்தக ரீதியில் மிகச் சிறிய திரையுலகமான மலையாளத்தில் நூறு கோடி ரூபாய் வசூலைத் தொடுவது அவ்வளவு சதாரணமான காரியமல்ல.

நடிகர் பிருத்திவிராஜ் இயக்குநராக அறிமுகமான முதல் படமே 100 கோடி வசூலில் சாதனை படைத்திருப்பது மலையாளத்தில் மட்டுமல்ல தமிழ்த் திரையுலகிலும் பேசுபொருளாகியுள்ளது. படத்தின் போஸ்டரில் நடிகர் மோகன்லால் காவல்துறை அதிகாரி ஒருவரை காலால் மிதிப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது. இதனால் கேரளா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த சர்சைகளைக் கடந்து ‘லூசிஃபர்’ வசூல் சாதனை செய்துள்ளது. இத்தகவலை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட மோகன்லால் இயக்குநர் பிருத்திவிராஜுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மாநிலத்தின் முதல்வர் இறந்தபின் அவரது இடத்தை அடைய ஆசைப்படுகிறான் வில்லனான முதல்வரின் மருமகன். வில்லனின் ஆசைகளுக்கு குறுக்கே முட்டுக்கட்டை போடுகிறார் முதல்வரின் நம்பிக்கைக்குரிய மோகன்லால். அதை மசாலா கலந்த ஆக்‌ஷனுடன் தந்துள்ளார் இயக்குநர் பிருத்திவிராஜ்.

மலையாள சினிமாவில் இதுவரை 3 படங்கள் 100 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்த படங்களாக உள்ளன. இந்த மூன்று திரைப்படங்களும் மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ளன. இதில் முதலாவதாக இணைந்தது புலிமுருகன் திரைப்படம். அதன் வசூல் 150 கோடிக்கும் மேல். மேலும் கடந்த ஆண்டு வெளியான ‘காயங்குளம் கொச்சுன்னி’ திரைப்படம் 100 கோடி ரூபாயைக் கடந்து வசூல் சாதனை செய்தது. அதில் மோகன்லால் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது இதில் லூசிஃபர் இணைந்துள்ளது.

இந்தப் படங்களைத் தொடர்ந்து மலையாள சினிமாவின் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் மோகன்லால் நடிப்பில் உருவான ஒப்பம், த்ரிஷ்யம் ஆகிய படங்களே அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

செவ்வாய், 9 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon