மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 10 ஜூலை 2020

பாஜக தேர்தல் அறிக்கை: வரவேற்கும் ரஜினிகாந்த்

பாஜக தேர்தல் அறிக்கை: வரவேற்கும் ரஜினிகாந்த்

பாஜக தேர்தல் அறிக்கையில் நதிகள் இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளதற்கு நடிகர் ரஜினிகாந்த் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு திரைத்துரையின் உச்ச நட்சத்திரங்களாய் இருக்கும் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் அரசியலுக்கு வருவதாக அதிரடியாக அறிவித்தனர். இவர்களில் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிய நடிகர் கமல்ஹாசன், வரும் மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறார். அரசியல் கட்சிக்கு முன்னோட்டமாக ரஜினி மக்கள் மன்றத்தை துவங்கியுள்ள நடிகர் ரஜினிகாந்த், வரும் தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை என்றும் சட்டமன்றத் தேர்தல்தான் இலக்கு என்றும் தெரிவித்துள்ளார். மேலும், குடிநீர் பிரச்சினைகளை தீர்த்து வைப்பவர்களுக்கு வாக்களியுங்கள் என்று அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் தர்பார் திரைப்படத்தின் பஃர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதைத் தொடர்ந்து, சென்னை போயஸ் கார்டனில் இன்று (ஏப்ரல் 9) செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்திடம், கமல்ஹாசன் உங்களுடைய ஆதரவைக் கேட்கிறாரே என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், “என்னுடைய அரசியல் நிலைப்பாடு குறித்து நான் ஏற்கனவே தெரிவித்துவிட்டேன். அதில் எந்தவித மாற்றமும் கிடையாது. இதுகுறித்து வேறு எதுவும் நான் பேச விரும்பவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

பாஜக தேர்தல் அறிக்கைக்கு வரவேற்பு

தொடர்ந்து பாஜக தேர்தல் அறிக்கை தொடர்பாக பேசியவர், “இந்தியாவிலுள்ள நதிகளை இணைக்க வேண்டும் என்று நான் தொடர்ந்து கூறிக்கொண்டிருக்கிறேன். முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் கனவும் அதுவாகத்தான் இருந்தது. இதுதொடர்பாக வாஜ்பாயை சந்தித்துப் பேசியபோது, அத்திட்டத்திற்கு பகீரத யோஜனா என்று பெயர் வைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டேன். ஏனெனில் சாத்தியப்படுத்த முடியாததை சாத்தியப்படுத்துவதற்கு பகீரதம் என்று பெயர். இந்த நிலையில் பாஜக நேற்று வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் நதிகள் இணைப்பு குறித்தும், அதற்கென தனி ஆணையத்தை உருவாக்குவோம் எனவும் வாக்குறுதி அளித்துள்ளனர். இது வரவேற்கத்தக்கது” என்று குறிப்பிட்ட ரஜினிகாந்த்,

தேர்தலில் மக்கள் என்ன தீர்ப்பளிக்கிறார்கள் என்று தெரியாது. ஆனால் பாஜக கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியமைத்தால் நதிகளை இணைக்கும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். அப்படி செய்தால் நாட்டிலுள்ள வறுமை பாதி ஒழிந்துவிடும். விவசாயிகள் வாழ்வு உயர்வதோடு மட்டுமல்லாமல், பல கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 9 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon