மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 7 ஜூலை 2020

பிரேதப் பரிசோதனையில் வீடியோ பதிவு: அரசு மறுப்பு!

பிரேதப் பரிசோதனையில் வீடியோ பதிவு: அரசு மறுப்பு!

அனைத்து பிரேதப் பரிசோதனைகளையும் வீடியோ பதிவு செய்வது சாத்தியமற்றது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பதிலளித்துள்ளது தமிழக அரசு.

அனைத்து பிரேதப் பரிசோதனைகளையும் வீடியோ பதிவு செய்ய உத்தரவிட வேண்டுமென்று கோரி, வழக்கறிஞர் அரவிந்த் சுவாமிநாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார்.

“பிரேதப் பரிசோதனை அறிக்கை அடிப்படையில்தான் ஒரு வழக்கு விசாரணை நடக்கிறது. பரிசோதனை நடந்த தினமே, அந்த அறிக்கையை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்க செய்ய வேண்டுமென்பது விதி. ஆனால் இந்த விதியை யாரும் பின்பற்றுவதில்லை. பரிசோதனையின்போது முறையான கருவிகளைப் பயன்படுத்துவதில்லை.

பெரும்பாலும் மருத்துவர்களுக்குப் பதிலாக மருத்துவமனையில் வேறு பணிகள் புரியும் உதவியாளர்களே பிரேதப் பரிசோதனையை மேற்கொள்கின்றனர். ஆனால் மருத்துவர்கள் முன்னிலையில் பிரேதப் பரிசோதனை நடந்ததாக அறிக்கை தருகின்றனர். எனவே, பிரேதப் பரிசோதனையின்போது வீடியோ பதிவுக்கு உத்தரவிட வேண்டும்” என்று அவரது மனுவில் கூறப்பட்டிருந்தது.

ஏற்கனவே நடந்த வழக்கு விசாரணையின்போது, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பிரேதப் பரிசோதனைகளை வீடியோ பதிவு செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டிருந்தது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.

இந்த வழக்கின் விசாரணை, இன்று (ஏப்ரல் 9) உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நடைபெற்றது. அப்போது தமிழக அரசின் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அனைத்து பிரேதப் பரிசோதனைகளையும் வீடியோ பதிவு செய்வது சாத்தியமற்றது என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, சந்தேகத்துக்கு உள்ளாகும் வகையில் மரணம் அடைந்தோரின் பிரேதப் பரிசோதனைகளை மட்டும் வீடியோ பதிவு செய்யுமாறு உத்தரவிட்டனர் நீதிபதிகள்.

முறையாகப் பிரேதப் பரிசோதனை செய்யப்படாததும் அறிக்கை தாக்கல் செய்யாததும் மட்டுமே, கொலை வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுதலை ஆவதற்குப் பெரும்பாலும் காரணமாக இருப்பதாகத் தெரிவித்தனர் நீதிபதிகள்.

செவ்வாய், 9 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon