மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 9 ஜூலை 2020

ஐடி ரெய்டு: கதிர்ஆனந்த் மீது தேர்தல் அலுவலர் புகார்!

ஐடி ரெய்டு: கதிர்ஆனந்த் மீது தேர்தல் அலுவலர் புகார்!

வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மீது தேர்தல் செலவின உதவி அலுவலர் காட்பாடி காவல் நிலையத்தில் இன்று புகார் அளித்துள்ளார்.

வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்தை குறிவைத்து காட்பாடியிலுள்ள துரைமுருகன் வீடு, அவரது குடும்பத்துக்கு சொந்தமான கிங்க்ஸ்டன் கல்வி நிறுவனங்கள், துரைமுருகன் நண்பர் பூஞ்சோலை சீனிவாசனுக்கு சொந்தமான சிமெண்ட் குடோன் ஆகிய இடங்களில் கடந்த மார்ச் 30 மற்றும் ஏப்ரல் 1ஆம் தேதி வருமான வரித் துறை சோதனை நடத்தியது. அதில் துரைமுருகன் இல்லத்தில் 10.50 லட்சம் ரூபாயும், பூஞ்சோலை சீனிவாசன் சிமெண்ட் குடோனில் 11. 48 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதாகவும் வருமான வரித் துறை தெரிவித்தது.

வருமான வரி சோதனை தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையத்திடம் கடந்த 3ஆம் தேதி வருமான வரித் துறை அறிக்கை தாக்கல் செய்தது.இந்த நிலையில் வேலூரில் பணம் கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக வருமான வரித் துறை பரிந்துரையின் பேரில் வழக்குப் பதிவு செய்ய முடிவு செய்துள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹு தெரிவித்திருந்தார்.

வேலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் கதிர் ஆனந்த் மீது வழக்குப் பதிவு செய்யக்கோரி தேர்தல் செலவின உதவி அலுவலர் காட்பாடி காவல் நிலையத்தில் இன்று (ஏப்ரல் 9) புகார் அளித்துள்ளார். அதில் கதிர் ஆனந்த் வேட்புமனுவில் குறிப்பிட்டதைக் காட்டிலும் அவருடைய வீட்டில் அதிக பணம், வருமான வரி சோதனையில் பிடிபட்டுள்ளதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்ய அனுமதி கேட்டு மாஜிஸ்திரேட்டிடம் இப்புகார் அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் வழக்குப் பதிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

வருமான வரி சோதனை மூலமாக வேலூர் தொகுதி மக்களவைத் தேர்தலையும் ஆம்பூர், குடியாத்தம் சட்டமன்ற இடைத் தேர்தலையும் நிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. தங்கள் மீது வீண் பழி சுமத்தப்படுவதாகவும் இதன் மூலம் கதிர் ஆனந்தின் வெற்றியை சீர்குலைத்துவிடலாம் என அரசுகள் பெருமுயற்சி எடுப்பதாகவும் துரைமுருகன் விமர்சித்திருந்தார். இதற்கிடையே கதிர் ஆனந்தை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென தமிழகம் வந்திருந்த தேர்தல் ஆணையர்களிடம் அதிமுக நேரடியாக வலியுறுத்தியிருக்கிறது.

தேர்தல் அலுவலர் அளித்த புகாரின் பேரில் கதிர் ஆனந்த் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் பட்சத்தில் வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்படுமா அல்லது கதிர் ஆனந்த் தகுதி நீக்கம் செய்யப்படுவாரா என்ற விவாதம் அரசியல் அரங்கில் எழுந்துள்ளது.

செவ்வாய், 9 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon