மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 12 ஆக 2020

அதிரன்: த்ரில்லரில் மிரட்டும் சாய் பல்லவி

அதிரன்: த்ரில்லரில் மிரட்டும் சாய் பல்லவி

சூர்யா நடிக்கும் என்ஜிகே படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ள சாய் பல்லவி தற்போது மலையாளத்திலும் பிஸியாக உள்ளார். அவர் நடிப்பில் அங்கு உருவாகும் அதிரன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி தற்போது கவனம் பெற்றுவருகிறது.

மலையாளத் திரையுலகில் சிறந்த கதைகளைத் தேடி நடித்துவரும் நடிகராக வலம் வருகிறார் பகத் ஃபாசில். இவர் நடிப்பில் தற்போது தமிழில் சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் வெளியாகி வரவேற்பு பெற்றுவரும் நிலையில் அதிரன் படத்தில் சாய் பல்லவிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

பிரகாஷ் ராஜ், அதுல் குல்கர்னி, ரெஞ்சி பணிக்கர், லேனா என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. ஏற்கெனவே டீசரின் மூலம் கவனத்தைப்பெற்ற அதிரன், தற்போதைய ட்ரெய்லரின் மூலம் மேலும் ஆர்வத்தைத் தூண்டும்விதமாக அமைந்துள்ளது.

மலைப்பிரதேசம் ஒன்றின் மனநல மருத்துவமனைக்கு வரும் டாக்டரான பகத்தின் வருகையில் ஆரம்பிக்கிறது ட்ரெய்லர். அவர் வருகையினால் பதற்றமடையும் நிர்வாகம், மர்மங்கள் நிறைந்த அதன் சுவர்கள், கவனத்தைத் தூண்டும் நோயாளியாக சாய் பல்லவி, சட்டென கேரளாவில் களரி வீராங்கனையாக விரியும் பின்கதை என அடுத்தடுத்து பல்ஸை ஏற்றும் ஆச்சரியங்களை உள்ளடக்கிய ட்ரெய்லராக வெளியாகியிருக்கிறது. ஜிப்ரானின் இசையும், அனு மூதடெத்தின் ஒளிப்பதிவும் நல்ல காட்சி அனுபவத்தைத் திரைப்படத்தைப் பார்க்கும் அனுபவத்தை அளிக்கின்றன.

புதுமுகம் விவேக் இயக்கத்தில் தேசிய விருது பெற்ற மலையாள திரைக்கதையாசிரியர் பி.ஃப். மாத்தியூஸின் திரைக்கதையில் இப்படம் உருவாகியுள்ளது. இவரது திரைக்கதையில் கடைசியாக வந்த ‘இ.மா.யூ’ நல்ல கவனம் பெற்றது. தற்போது வெளியான ட்ரெய்லர் அந்த வரிசையில் இணையும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் 12ஆம் தேதி இந்தப் படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிரன் ட்ரெய்லர்

செவ்வாய், 9 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon