மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 25 செப் 2020

கிச்சன் கீர்த்தனா: கம்பு கிச்சடி

கிச்சன் கீர்த்தனா: கம்பு கிச்சடி

கர்ப்பிணிப் பெண்களுக்கேற்ற உணவு

ஹரியானாவின் கிராமப் பகுதிகளில் கம்பும் பச்சைப் பயறும் சேர்த்துத் தயாரிக்கப்படும் கிச்சடி, அன்றாட உணவுகளில் ஒன்றாக இருக்கிறது. அதில் தயிரும் சர்க்கரையும் கலந்து இனிப்பாக உண்ணும் வழக்கத்தையும் வைத்திருக்கிறார்கள். ஒடிஸாவில் இந்த உணவு, Khechidi என்றழைக்கப்படுகிறது. பூரி ஜெகன்னாதர் கோயில் பிரசாதங்களில் Adahengu khechidi என்பதும் ஒன்று. பஞ்சாப், ஹரியானா மாநில ஸ்பெஷல் கிச்சடி இது.

என்ன தேவை?

கம்பு – ஒரு கப்

பச்சைப் பயறு – அரை கப்

மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை

பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்)

தோல் சீவி, துருவிய இஞ்சி – ஒரு டீஸ்பூன்

கடுகு – கால் டீஸ்பூன்

சீரகம் – ஒரு டீஸ்பூன்

பெருங்காயத் தூள் – கால் டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

நெய் – 2 டீஸ்பூன்

தண்ணீர் – 4 கப்

உப்பு – தேவையான அளவு

தாளித்து அலங்கரிக்க:

நெய் – ஒரு டீஸ்பூன்

சீரகம் – ஒரு டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

கம்பை நன்கு கழுவி, சுத்தம் செய்து எட்டு மணி நேரம் ஊறவிடவும். பிறகு களைந்து தண்ணீரை வடிகட்டவும். பச்சைப் பயற்றைக் கழுவி எட்டு மணி நேரம் ஊறவைத்து வடிகட்டவும். கம்பை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் விடாமல் ஒன்றிரண்டாக அரைத்து எடுக்கவும். குக்கரில் நெய்விட்டு உருக்கி கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளிக்கவும். அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சித் துருவல் சேர்த்து வதக்கவும். பிறகு, அரைத்த கம்பு, பச்சைப் பயற்றைச் சேர்த்து ஒரு நிமிடம் நன்கு வதக்கவும். அதனுடன் உப்பு, மஞ்சள் தூள், தண்ணீர் சேர்த்துக் கிளறி, குக்கரை மூடி மூன்று விசில் விட்டு இறக்கவும். கிச்சடி தயார். தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து கிச்சடியின் மேலே சேர்த்து அலங்கரித்துப் பரிமாறவும்.

என்ன பலன்?

விரும்பினால் காய்கறிகள் சேர்த்தும் செய்யலாம்; நார்ச்சத்து அதிகம் கிடைக்கும். கர்ப்பிணிப் பெண்களுக்கும் வளரும் குழந்தைகளும் மிகவும் நல்லது. ஆனால், பாரம்பரியமாகச் செய்யும்போது காய்கறிகள் சேர்க்க மாட்டார்கள்.

நேற்றைய ரெசிப்பி: எனர்ஜி தரும் ரைஸ் கிச்சடி

செவ்வாய், 9 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon