மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 6 ஆக 2020

மாவோயிஸ்ட் தாக்குதல்: பாஜக எம்.எல்.ஏ படுகொலை!

மாவோயிஸ்ட் தாக்குதல்: பாஜக எம்.எல்.ஏ படுகொலை!

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்டுகள் நடத்திய தாக்குதலில் பாஜக எம்.எல்.ஏ உட்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

மாவோயிஸ்ட்டுகள் ஆதிக்கம் நிறைந்த சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடாவை உள்ளடக்கிய பஸ்தார் தொகுதியில் நாளை (ஏப்ரல் 11) முதல்கட்ட வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. தண்டேவாடா மாவட்டத்தின் பச்சேலி பகுதியிலிருந்து குவாகோண்டா பகுதியை நோக்கி பாஜக எம்.எல்.ஏ பீமா மந்தாவி, தனது பாதுகாப்பு வாகனங்களுடன் நேற்று (ஏப்ரல் 9) மாலை சென்று கொண்டிருந்தார்.

சியமிகிரி என்னும் மலைப்பகுதியைக் கடந்தபோது, எம்.எல்.ஏ பயணித்த கார் மீது மாவோயிஸ்ட்டுகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதைத்தொடர்ந்து, பிற வாகனங்கள் மீது அவர்கள் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். வெடிகுண்டு தாக்குதலுக்குள்ளான கார் முழுவதுமாக உருக்குலைந்தது. அதிலிருந்த எம்.எல்.ஏ உட்பட அனைவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் எம்.எல்.ஏ உட்பட ஐந்து பேர் பலியாகினர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த பாதுகாப்புப் படையினர், மாவோயிஸ்ட்டுகளைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் நடைபெற இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் மாவோயிஸ்ட்டுகளின் தாக்குதல் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அங்கு கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

மாவோயிஸ்ட்டுகள் தாக்குதல் குறித்து தலைமைத் தேர்தல் ஆணையம் அறிக்கை கேட்டுள்ளது. இதையடுத்து சத்தீஸ்கர் தேர்தல் அதிகாரி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் காவல் துறையினருடன் ஆலோசனையில் ஈடுபட்டார். மாநில முதல்வர் பூபேஷ் பாகல் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

மாவோயிஸ்ட் தடுப்புப் பிரிவு டிஐஜிபி சுந்தர் ராஜ் இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், "எம்.எல்.ஏ.வின் காரை குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சக்தி வாய்ந்த ஐஇடி ரக குண்டு வெடிக்கப்பட்டுள்ளது. குண்டு வெடித்த சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. சேதங்கள் மதிப்பிடப்பட்டு வருகிறது. காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது" என்றார்.

ஐந்து பேர் உயிரிழப்புக்குப் பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், "சத்தீஸ்கரில் நடந்த மாவோயிஸ்ட் தாக்குதல் வன்மையான கண்டனத்துக்குரியது. இச்சம்பவத்தில் உயிரிழந்த பாதுகாப்புப் படையினருக்கு எனது அஞ்சலி. இவர்களின் தியாகங்கள் வீண் போகாது" என்று கூறியுள்ளார். அதேபோல பீமா மந்தாவியின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்துத் தனிப்பட்ட பதிவு ஒன்றையும் மோடி இட்டுள்ளார்.

"தண்டேவாடாவில் நடந்த தாக்குதல் சம்பவம் மிகுந்த துயரமானது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வலிமையும், அமைதியும் கிடைக்கட்டும் என இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

புதன், 10 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon