டிக்டாக் செயலியைப் பதிவிறக்கம் செய்ய தடை விதித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவை எதிர்த்து, தாக்கல் செய்யப்பட்ட மனு வரும் ஏப்ரல் 15ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
ஸ்மார்ட்போன்களில் அதிகம் பயன்படுத்தப்படும் டிக்டாக் செயலி மூலமாக ஆபாச வீடியோக்கள் பதிவேற்றப்படுவதாகவும், இவற்றினால் சமூகப் பிரச்சினைகள் உண்டாவதாகவும் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, டிக்டாக் செயலியைத் தடை செய்ய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டுமென்று உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் டிக்டாக் செயலி நிர்வாகத்தின் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. கடந்த 8ஆம் தேதியன்று இந்த வழக்கு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, இதனை அவசர வழக்காக ஏற்கவேண்டுமென்று மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு அதற்கு மறுப்பு தெரிவித்தது.
நேற்று (ஏப்ரல் 9) இந்த வழக்கானது வரும் ஏப்ரல் 15ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்தது உச்ச நீதிமன்றம்.