மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 28 செப் 2020

மொபைல் செயலி வழியாக மக்கள்தொகைக் கணக்கெடுப்பு!

மொபைல் செயலி வழியாக மக்கள்தொகைக் கணக்கெடுப்பு!

2021ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணிகளுக்கு மொபைல் செயலியைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக இந்தியப் பொது பதிவாளர் அலுவலக அதிகாரி தெரிவித்துள்ளார்.

தரவு பயனர்களுக்கான இரண்டு நாள் கூட்டம் நேற்று (ஏப்ரல் 9) டெல்லியில் தொடங்கியது. அந்தக் கூட்டத்தில் இந்தியப் பொது பதிவாளர் அலுவலக அதிகாரி ஒருவர் பேசுகையில், “மக்கள்தொகைக் கணக்கு விவரங்களைச் சேகரிப்பவர்கள் இந்த முறை அவர்களுடைய சொந்த மொபைல்போன்களைப் பயன்படுத்தியும் தகவல்கள் சேகரிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். முந்தைய முறைகளைப் போல காகிதப் பட்டியலிலும் விவரங்களைச் சேகரிக்கலாம். அவற்றை இறுதியாக மின்னணு தரவுகளாகச் சமர்ப்பிக்க வேண்டும்” என்றார். அதாவது இம்முறை மொபைல் செயலியை மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்குப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்தியப் பொதுப் பதிவாளர் மற்றும் கணக்கெடுப்பு ஆணையாளர் விவேக் ஜோஷி பேசுகையில், “2021ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். முதல்கட்ட கணக்கெடுப்பு 2020 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையில் ஏதேனும் இரண்டு மாதத்தில் நடத்தப்படும். இரண்டாம்கட்டமாக 2021 ஏப்ரல் 9 முதல் 28 வரை நடத்தப்படும். 2021 மார்ச் 1 முதல் 5 வரை திருத்தும் சுற்றுப் பணிகள் நடைபெறும்” என்றார்.

மத்திய உள்துறை செயலாளர் ராஜிவ் கவுபா இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகையில், “2021 மக்களவைக் கணக்கெடுப்புக்கான பணியில் 33 லட்சம் தகவல் சேகரிப்பாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இதற்கான அறிவிப்பாணை ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் கணக்கெடுப்பானது வெறும் மக்கள்தொகையைக் கணக்கிடுவதாக மட்டும் இல்லை. முக்கியத்துவம் வாய்ந்த சமூகப் பொருளாதார தரவுகளையும் வழங்குகிறது. இந்தத் தரவுகள் பொருளாதார மேம்பாடுகளுக்கும், நலத்திட்டங்களுக்கும் திட்டங்களைச் சீரமைத்துச் செயல்பட பயன்படுகிறது” என்றார்.

செவ்வாய், 9 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon