மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 10 ஜூலை 2020

தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அய்யாக்கண்ணு

தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அய்யாக்கண்ணு

அமித் ஷாவைச் சந்தித்த பிறகு பாஜக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்த விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு, “மக்களவைத் தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை” என்று அறிவித்துள்ளார்.

மத்திய அரசுக்கும் பிரதமர் மோடிக்கும் எதிராக தமிழக விவசாயிகளைத் திரட்டி டெல்லியில் நிர்வாணப் போராட்டம், எலிக்கறி உண்ணும் போராட்டம் என பல வடிவங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயச் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு, காசியில் மோடியை எதிர்த்து 111 விவசாயிகள் போட்டியிடும் முடிவை சில நாட்களுக்கு முன்பு திரும்பப் பெற்றார். தமிழக அமைச்சர் தங்கமணி மூலமாக டெல்லியில் அமித் ஷாவைச் சந்தித்த பின், தன்னுடைய முடிவிலிருந்து பின்வாங்கிய அவர், பாஜக தனது தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்கு அதிகமான சலுகைகளை அறிவித்துள்ளது என்றும் பாராட்டியிருந்தார். ஏப்ரல் 10ஆம் தேதி திருச்சியில் செயற்குழுக் கூட்டம் வைத்துள்ளேன் அங்கு எங்களின் முடிவைத் தெளிவுபடுத்துவேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதுதொடர்பாக ஆவேச அய்யாக்கண்ணு ஆஃப் ஆன பின்னணி! என்ற தலைப்பில் கடந்த 8ஆம் தேதி வெளியிட்டிருந்த செய்தியில், அமித்ஷா - அய்யாக்கண்ணு சந்திப்பின் விளைவாக, தேர்தலுக்குப் பிறகு அய்யாக்கண்ணுவுக்கு பாஜகவில் நல்ல பொறுப்பும் வழங்கப்படும் என்கிறார்கள். அதே நேரத்தில் புதன்கிழமை கூடும் விவசாயச் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டத்தில் சலசலப்புகளும் வரும் என்கிறார்கள் முக்கிய நிர்வாகிகள் என்று குறிப்பிட்டிருந்தோம்.

இந்த நிலையில்தான் திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் நேற்று (ஏப்ரல் 10) அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்று முடிந்திருக்கிறது. 120 நிர்வாகிகள் வரை கலந்துகொண்ட இக்கூட்டத்தில் பல நிர்வாகிகள், அமித் ஷாவை அய்யாக்கண்ணு சந்தித்ததற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் அத்தனை போராட்டம் நடத்தினோம், அப்போதெல்லாம் மத்திய பாஜக அரசு நம்மை கண்டுகொள்ளக்கூட இல்லை, அவமானப்படுத்தியது. இந்த நிலைமையில் யாரிடமும் கலந்தாலோசிக்காமல் நீங்கள் எவ்வாறு அமித் ஷாவைச் சந்திக்கலாம் என்ற கேள்வி கூட்டத்தின் நாலாப்புறத்திலிருந்தும் எதிரொலித்துள்ளது.

இதையடுத்து அமைதியாக எழுந்த அய்யாக்கண்ணு, நான் என்னுடைய விளக்கத்தைத் தருகிறேன், அதன் பிறகு நீங்கள் என்ன வேண்டுமானாலும் கேளுங்கள் என்று கூறிவிட்டு, “நாம் வைத்த கோரிக்கைகளுக்கு காங்கிரஸோ, திமுகவோ செவிசாய்க்கவில்லை.

காசியில் நாம் போட்டியிடப் போகிறோம் என்று அறிவித்த பிறகு அமைச்சர் தங்கமணி மூலமாக பியூஷ்கோயல் பேசி, அமித் ஷாவைச் சந்திக்க வைத்தனர். மறுநாள் வெளியாக இருந்த தேர்தல் அறிக்கையை என்னிடம் காட்டிய அமித் ஷா, நாம் விடுத்த கோரிக்கைகளில் நதிகள் இணைப்பு ஆணையம் உள்ளிட்ட ஐந்து கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்வதை மட்டும் அழுத்தமாக மறுத்துவிட்டார். நம்முடைய கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாலும், மரியாதையாக அழைத்துப் பேசியதாலும் போட்டியில்லை என்று முடிவெடுத்தேன். இருப்பினும் யாருக்கும் ஆதரவு தெரிவிக்கச் சொல்லி உங்களைக் கட்டாயப்படுத்தவில்லை. உங்களுக்கு விருப்பப்பட்டவர்களுக்கு வாக்களியுங்கள்” என்று பேசினாராம்.

கூட்டத்தில் இறுதியாக யாருக்கும் ஆதரவில்லை என்ற முடிவு குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அய்யாக்கண்ணு, “மக்களவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் எங்கள் சங்கம் ஆதரவளிக்காது. எங்களின் போராட்டத்தினால்தான் விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை பாஜக தங்கள் தேர்தல் வாக்குறுதியாக அறிவித்துள்ளது. அது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. விவசாயிகளின் கோரிக்கைகளைத் தேர்தல் வாக்குறுதியாக அளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்த பின்பு அதை நிறைவேற்றவில்லை என்றால் எந்தக் கட்சியாக இருந்தாலும் அவர்களை எதிர்த்துப் போராடுவோம்” என்று தெரிவித்தார்.

அமித் ஷாவை நாங்கள் சந்தித்ததை சில அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்கிறார்கள். பலர் எங்கள் மீது அவதூறு பரப்புகிறார்கள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அய்யாக்கண்ணு வலியுறுத்தினார்.

வியாழன், 11 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon