மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 5 ஜூலை 2020

மின்னம்பலம் - மக்கள் மனம் - ஒரு சோறு பதம்!

மின்னம்பலம் - மக்கள் மனம் - ஒரு சோறு பதம்!

தமிழகத்தில் மக்களவை, மினி சட்டமன்றத் தேர்தல்கள் ஏப்ரல் 18 ஆம்தேதி நடைபெற இருக்கும் நிலையில் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறாக மக்களின் மனதை அறிய தர்மபுரி தொகுதியில் வலம் வந்தோம்.

ஏன் தர்மபுரிக்குச் சென்று வந்தோம்?

2014 மக்களவைத் தேர்தலில் அதிமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித்து நின்று தேர்தலைச் சந்தித்தன. திமுக தலைமையிலான கூட்டணியில் திமுக, விடுதலைச் சிறுத்தைகள், மமக, முஸ்லிம் லீக், புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக, மதிமுக, தேமுதிக, கொமதேக, ஐஜேகே ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. அப்போது தனித்து நின்ற அதிமுக 37 இடங்களில் வென்றது. பாஜக கூட்டணியில் பாஜக கன்னியாகுமரியிலும், பாமக தர்மபுரியிலும் வென்றன. தர்மபுரியில் பாமகவின் அன்புமணி வெற்றிபெற்றார். அதிமுக இரண்டாம் இடமும், திமுக மூன்றாம் இடமும் பெற்றன.

2014 தேர்தலில் 37 தொகுதிகளில் வென்ற அதிமுகவும், தர்மபுரியில் தேஜகூ சார்பாக வென்ற பாமகவும் (தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள அநேக கட்சிகளும்) இப்போது 2019 மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்ற நிலையில் திமுக எதிர்த்து நிற்கிறது. தர்மபுரி தொகுதியில் தட்பவெப்பத்தை உணர்ந்தால் அது தமிழ்நாடு முழுமைக்குமான தாக்கத்தின் பிரதியாக இருக்கிறது என்ற காரணத்தாலேயே நாம் தர்மபுரியைத் தேர்ந்தெடுத்தோம்.

மேலும், தர்மபுரி மக்களவைத் தொகுதிக்குள் அரூர், பாப்பிரெட்டிபட்டி ஆகிய இரு சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிகளும் வருவதால் மக்களவை, மினி சட்டமன்றம் ஆகிய இரு தேர்தல்களிலும் தர்மபுரியின் பிரதிநிதித்துவம் முன் மாதிரியாக இருக்கிறது.

அந்த அடிப்படையில் தர்மபுரி மக்களவைக்கு உட்பட்ட அரூர், பாப்பிரெட்டிபட்டி ஆகிய இரு தொகுதிகளிலும் தலா 200 பேரிடம் இத்தேர்தல் தொடர்பான கேள்விகளை முன்வைத்தோம்.

அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களைத் திட்டமிட்டே இந்தச் சந்திப்பில் தவிர்த்துவிட்டோம். ஏனெனில் அவர்கள் ஒரு முன்முடிவோடுதான் கேள்விகளை அணுகுவார்கள். எந்தக் கட்சியிலும் இல்லாத, சமூகத்தின் பல்வேறு படிநிலைகளை, தரப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களைச் சந்தித்து மின்னம்பலம் கடந்த சில தினங்களில் முன்வைத்த கேள்விகளுக்கான பதில்கள் அப்படியே உங்கள் பார்வைக்கு சிறப்பு அட்டவணைகளில் தரப்பட்டுள்ளன. மக்களின் எண்ண ஓட்டங்களை இப்போது பார்ப்போம்.

தர்மபுரி மக்களவை - அரூர் சட்டமன்றம்!

அட்டவணை - 1

தொகுதி முழுக்க வலம்வந்ததில் புதிய வாக்காளர்கள் பெரும்பாலானோர் மத்திய ஆட்சிக்கு எதிரான மனநிலையில் இருக்கிறார்கள்.

வியாபாரிகள், மாணவர்கள், பெற்றோர்கள், அரசு ஊழியர்கள் போன்றோரும் மத்திய அரசு மீது அதிருப்தியில் இருக்கிறார்கள்.

திமுக, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ள விவசாயக் கடன் தள்ளுபடி, நகைக் கடன் தள்ளுபடி, நீட் தேர்வு ரத்து போன்றவை மிடில் கிளாஸ் மக்களையும், விவசாயிகளையும் கவர்ந்துள்ளன.

ஆளுங்கட்சி எவ்வளவு பணம் கொடுத்தாலும் வெற்றிபெற முடியாது என்று நம்மிடம் பேசிய வறுமைக் கோட்டுக் கீழே உள்ள மக்களே சொல்வது ஆச்சரியமான உண்மை.

தர்மபுரி மக்களவை - பாப்பிரெட்டிபட்டி சட்டமன்றம்

அட்டவணை - 2

பாப்பிரெட்டிபட்டி தொகுதி முழுக்க மூன்று வேட்பாளர்களும் வெளியூரைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் சின்னங்களே பிரதான பங்கு வகிக்கின்றன.

தர்மபுரியை ஒட்டியுள்ள பகுதிகளின் வாக்குகளை மட்டுமே அதிமுக, அமமுக வேட்பாளர்கள் நம்பியுள்ளனர். மற்ற இடங்களில் எல்லாம் உதயசூரியன் சின்னமே என்கிறார்கள் பரவலான வாக்காளர்கள்.

இந்தத் தொகுதியில் அதிமுகவினர் தங்கள் சாதனைகளைவிட அன்புமணியையே முன்னிறுத்தி வாக்கு கேட்பது அதிமுக தொண்டர்களுக்கே புரியாத புதிராக இருக்கிறது.

அன்புமணி, அமைச்சர் அன்பழகன் சேர்ந்து செல்லுமிடங்களில் மட்டுமே அனைத்துக் கூட்டணிக் கட்சியினரும் செல்கிறார்கள். மற்ற இடங்களில் இந்த ஒற்றுமை இல்லை.

ஒட்டுமொத்த தர்மபுரி மாவட்ட அதிமுக நிர்வாகிகளில் சரிபாதிப் பேர் இந்தத் தொகுதியில் மட்டுமே வேலை பார்க்கிறார்கள். அந்த நம்பிக்கையில் அதிமுக வேட்பாளர் கோவிந்தசாமி வெற்றி பெறுவதாக தர்மபுரியை ஒட்டியுள்ள பகுதிகளில் தெரிந்தாலும், தொகுதியின் மறு பகுதியில் அவரை யாரென்றே தெரியவில்லை. ஆகையால், ஆளுங்கட்சியினர் பணப் பட்டுவாடாவை மட்டுமே நம்பியுள்ளனர்.

ஓசூர் சட்டமன்றம்

இங்கும் புதிய வாக்காளர்களும், இளைஞர்களும் மோடி மீது கோபத்தில் இருக்கிறார்கள். ஏழை மாணவர்கள், பெற்றோர்கள், அரசு ஊழியர்களும் மாநில, மத்திய அரசுகளின் மீது கோபத்தை வெளிப்படுத்தினார்கள்.

இங்கிருக்கும் எஸ்சி, எஸ்டி வாக்குகள் முழுக்க முழுக்க திமுக அணியையே சென்று சேரும் என்பதே நிலைமை.

மக்கள் கருத்து

இந்தச் சந்திப்பின்போது பால் விற்பனையாளர், துணிக் கடைக்காரர், இல்லத்தரசி, டிரைவர், விவசாயி, பூசாரி, மேடைப் பாடகர், இரும்பு வியாபாரி என்று பல்வேறு தரப்பட்ட மக்களைச் சந்தித்து அவர்களின் கருத்துகளைத் தொகுத்து அட்டவணையாகக் கொடுத்திருக்கிறோம்.

பல வியாபாரிகள் ஜிஎஸ்டி வரியின் இப்போதைய வடிவத்தை ஒழிக்க வேண்டுமென்பதற்காகவே திமுக - காங்கிரஸ் கூட்டணியை ஆதரிக்கிறார்கள். அதுபோல பாமகவை ஆதரிக்கும் பலரும் அன்புமணிக்காக ஆதரிக்கிறோம் என்று வித்தியாசமான ஒரு காரணத்தைச் சொன்னார்கள்.

வியாழன், 11 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon