மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 ஏப் 2019

காலங்காலமாகத் தொடரும் சமயச் சண்டை - அ.குமரேசன்

காலங்காலமாகத் தொடரும் சமயச் சண்டை - அ.குமரேசன்

தேர்தல் நேரம் - மதவாதக் களம் - மக்கள் மனம்: 4

அந்த நண்பர் சொந்தமாய் ஒரு தொழில் நடத்திவந்தார். கோடிக்கணக்கில் லாபம் கொட்டவில்லை என்றாலும், ஒரு நடுத்தரத் தொழிலதிபர் என்ற மதிப்புடனும், மரியாதையான வருவாயுடனும் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாகச் சென்றுகொண்டிருந்தது. ஒருகட்டத்தில் வருவாய் சுருங்கத் தொடங்கியது. பின்னர் வறண்டே போனது. கடனுக்கு மேல் கடன், ஒரு கடனை அடைக்க இன்னொரு கடன். அந்தச் சரிவுக்குக் காரணம், ஏகப்பட்டோர் சிறிதும் பெரிதுமாக முதலீடு செய்து போட்டிக்கு வந்துவிட்ட சந்தை நிலவரமும், வணிகம் சார்ந்த புதிய வளர்ச்சிகளைப் புரிந்துகொள்ளாததும்தான். ஆனால், அவரது அலுவலகத்தில் அவரது அறையை தென்மூலைக்கு மாற்றியமைத்தால் நிலைமை மாறிவிடும் என்றார்கள். சில பல ஆயிரங்கள் செலவிட்டு அதை மாற்றியமைத்தார். அப்புறமும் நிலைமை மாறவில்லை.

இயந்திர அறையின் வாசலைச் செங்கல் அடுக்கி மூடிவிட்டு, சுவரின் மறுகோடியில் புதிய வாசல் அமைக்கச் சொன்னார்கள். அதையும் செய்தார். வணிகம் விழுந்துகொண்டே இருந்தது. ஒரு புதிய உண்மையைக் கண்டுபிடித்தவர்களாக, அவர் குடியிருந்த வீட்டின் பூஜையறையைப் புதிதாகக் கட்டச் சொன்னார்கள். அதுவும் பலிக்கவில்லை. வீட்டு முகப்பில் கிழக்குச் சாய்வாக இருந்த மாடிச்சுவர் விளிம்பை, மேற்குச் சாய்வாகத் திருத்தச் சொன்னார்கள். நிலைமை மாறவில்லை. கார் விற்கப்பட்டது, நகைகள் அடகுக் கடைக்குச் சென்றன. வணிகம் மீளவில்லை.

இந்தக் கட்டுமான வேலைகளையெல்லாம் செய்துகொடுத்த மேஸ்திரியே ஒருநாள் பொறுக்கமாட்டாமல் சொன்னார்: “சார், பிசினஸ் ஏன் பிக்கப் ஆகலைன்னு உங்க தொழில்ல இருக்கிறவங்ககிட்டயேகூட விசாரிச்சுத் தெரிஞ்சிக்கிட்டு மாற்றம் கொண்டுவாங்க. தேவைப்பட்டா தொழிலையே மாத்துங்க… அதைவிட்டுட்டு இப்படி வாஸ்து பார்த்துக்கிட்டிருக்கீங்களே?”

தொழிலதிபரின் எதிர்வினை என்ன தெரியுமா? “தம்பி, என் மேல அக்கறையோடதான் சொல்றீங்க, தேங்க்ஸ். ஆனா, இது எங்களோட நம்பிக்கை சம்பந்தப்பட்ட விஷயம். இதிலே நீங்க தலையிடாதீங்க.”

இன்று வேறோர் ஊரில், அதே தொழிலில் ஈடுபட்டிருக்கிற வேறொருவரின் நிறுவனத்தில் ஒரு மேலாளராக வேலை செய்துகொண்டிருக்கிற இவரது நிலைமையை வெறும் மூட நம்பிக்கையோடு மட்டும் தொடர்புபடுத்தி விமர்சிக்க முடியாது. இவ்வளவு நடந்த பிறகும் அவர் தன் நம்பிக்கைகளை மாற்றிக்கொள்ளவில்லை. “எங்களோட நம்பிக்கை” என்று அவர் சொன்னதில் குடும்பம், சமூகம், மதம், கடவுள், சடங்கு, சம்பிரதாயம், அவற்றை உறுதியாகப் பின்பற்றுகிற பெருமிதம் எல்லாம் கலந்திருக்கின்றன.

இவர் தோல்வியடைந்தவர். ஆனால், வெற்றிகரமாகத் தொழில் செய்கிறவர்கள் முதல், லாப வெள்ளத்தில் நீந்துகிறவர்கள் வரையில் இதையெல்லாம் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். அதைப் பார்த்து மற்றவர்களும், அவர்களுடைய முன்னேற்றத்துக்குக் காரணம் தொழில் அறிவல்ல அவர்கள் செய்கிற பூஜைகள்தான் என்று நம்பி தாங்களும் பின்பற்றுகிறார்கள். அது தொழில் சார்ந்த அக்கறையோடு நிற்கவில்லை, அதைத் தாண்டி அந்தச் சடங்குகளையும் வழிபாடுகளையும் பராமரித்து வருகிற மத அமைப்பின் மீதான விசுவாசத்தோடும் இணைகிறது.

“பொண்டாட்டி புள்ளைகளைப் பத்திக் கவலைப்படாம இவரு இப்படிக் கோயில், பூஜை, யாகம்னு சுத்துறாரே” என்ற விமர்சனம் பலர் மீது பாய்கிறது. அப்படிச் சுற்றுகிறவர்களிடம் உரையாடல் நடத்த முடிவதே இல்லை. அவர்களுடைய நம்பிக்கையில் ஒரு மூர்க்கமும் கலந்திருக்கும். அந்த மூர்க்கத்தின் வேராக அச்சமும் இருக்கும். “நம் மதத்தைக் குறை கூற விடுவதா” என்ற ஆத்திரமும் இருக்கும். அவருக்கு சுயம்புவாக அந்த ஆத்திரம் வரவில்லை என்றாலும், குறைகளைச் சுட்டிக்காட்டிக் கவலைகளைப் பகிர்ந்துகொள்கிறவர்களை “இந்து விரோதிகள்” என்று “போட்டுக்கொடுப்பதற்கு” நான்கு பேர் கிளம்பிக்கொண்டே இருப்பார்கள். இதே போல் மற்ற மதங்களைப் பின்பற்றுவோரிடையேயும் கிளம்பிக்கொண்டிருப்பார்கள்.

இந்தத் தனி மனித உளவியல் அடிப்படையில்தான் சமூக உளவியல் கட்டமைக்கப்படுகிறது. சமூக உளவியல் தனிமனிதர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதைப் புரிந்துகொள்ளாமல் இந்தியாவில் வகுப்புவாத அரசியல் வளர்ந்திருப்பதையும், அது இன்று பாசிசமாக வினையாற்றுவதையும், பயங்கரவாதமாக எதிர்வினையாற்றுவதையும் ஆராய முடியாது. பாசிச அபாயம் குறித்து எச்சரிக்கிற அக்கறை மிகுந்த உரையாடல்களில் மக்களின் இந்த மனநிலை பற்றிய வெளிப்பாடுகளைக் கேட்க முடிவதில்லை, அல்லது மிகக் குறைவாகவே கேட்க முடிகிறது. அதைப் பற்றிப் பேசினால் மக்கள் மனம் புண்படும் என்றோ, மக்கள் தங்களுக்கு எதிராகத் திரும்பக்கூடும் என்றோ கருதி அதைத் தவிர்த்துவிடுகிறார்கள்.

மதவாத சக்திகளின், குறிப்பாகப் பெரும்பான்மை மக்களைத் திரட்டுகிறவர்களின் வரலாறு, பின்னணி, திட்டம், நடைமுறை பற்றியெல்லாம் விவாதிக்கப்படுவதும், அவர்களுக்கு எதிரான இயக்கங்களை வலுவாகக் கட்டுவது பற்றி ஆலோசிக்கப்படுவதும் முக்கியத் தேவை. அதேவேளையில், நச்சுவிதைகளும் வேரூன்றத் தோதாக அமைந்த மண் போல மக்கள் மனநிலை இருப்பது பற்றிப் புரிந்துகொள்ளப்படுவதும் முக்கியத் தேவைதான்.

இந்திய மக்களை இந்துக்கள் என்றும் முஸ்லிம்கள் என்றும் பிரித்துவைப்பதன் மூலம் ஆட்சியதிகாரத்தை நிறுவ முயல்கிற இன்றைய அரசியல்வாதிகளுக்குக் குருநாதர்கள் உண்டு. தேசியம் பேசுகிற இந்த அரசியல்வாதிகளின் குருநாதர்கள் இந்திய நாடுகளை அடிமைப்படுத்திய அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள்தான். இரு தரப்பு மக்களிடையே, திட்டமிட்ட முறையிலேயே பகை மூட்டி ஒன்றுசேர்ந்துவிடாமல் பார்த்துக்கொண்டார்கள் என்ற செய்திகள் வரலாற்றில் நிறையவே கிடைக்கின்றன. அந்நாட்களின் இந்து மகாசபா, முஸ்லிம் லீக் இரண்டு அமைப்புகளையுமே பிரிட்டிஷ் அதிகாரிகள் ஊட்டிவளர்த்தார்கள். முகலாயர் ஆட்சிக் காலத்தில் திட்டமிட்ட முறையில் ஒரு நல்லிணக்கம் வளர்க்கப்பட்டது. அந்த நல்லிணக்கம் சிதைக்கப்படுவதை, அது தன் ஆட்சிக்கு எதிராக மக்கள் திரும்பிவிடாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் என்ற கணக்கோடு, விசிறிவிட்டு வேடிக்கை பார்த்தது பிரிட்டிஷ் அரசு.

ஆனால், பிரிட்டிஷ் அரசு துணிந்து இந்தக் கணக்கைப் போட முடிந்தது எப்படி? இங்கே நெடுங்காலமாகவே “உங்கள் சாதிச் சண்டை போச்சோ, சமயச் சண்டை போச்சோ” என்று கேட்பதற்கான தனிமனித / சமூக மனநிலை நிலவிவந்திருப்பதால்தான் அது சாத்தியமானது. இந்து மதமாக இணைவதற்கு முன் இங்கே சைவ - வைணவச் சண்டைகள் கொடூரமாக நடந்ததில்லையா? கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலில் வருகிற இரண்டு பேர் நடுச்சாலையில் சிவனா, பெருமாளா... யார் பெரியவர் என்று போட்டுக்கொள்கிற சண்டையில் வேடிக்கை நிகழ்வும் இருக்கிறது, வேற்றுமை நிலவரமும் இருக்கிறதல்லவா? மனிதர்களைப் பிறப்பால் பாகுபடுத்திய வைதீக மதத்தை எதிர்த்த இயக்கங்களாகத் தொடங்கி, பின்னர் புதிய சமயங்களாகவே புத்தமும் சமணமும் உருவெடுத்தன. அந்தச் சமயங்களைச் சேர்ந்தவர்கள் கொடிய வன்முறைகளுக்கு உட்படுத்தப்பட்ட கதைகளை வெறும் புனைவுகள் என்று தள்ளிவிட முடியுமா – அப்படித் தள்ளிவிடும் முயற்சிகள் நடக்கின்றன என்றாலும்?

ஜெர்மனியில் யூத சமய மக்களை ஒழிப்பதில் ஹிட்லர் அன்று பெருமளவுக்கு வெற்றிபெற முடிந்தது. அதற்கு ஆதரவாக அமைந்தது கிறிஸ்துவ மக்களிடையே பரவியிருந்த யூத வெறுப்பும்தானே? அதன் இந்தியப் பதிப்பாக வளர்ந்திருப்பது இந்துத்துவ அரசியல். இந்துத்துவம் என்பது மதவாதம் அல்ல, அது ஒரு வாழ்க்கை முறை என்று இந்துத்துவவாதிகள் சொல்லிக்கொள்கிறார்கள். அவர்களுக்கு எடுத்துக்கொடுப்பதாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஒன்று (நீதிபதி ஜே.எஸ்.வர்மா, 1995) இருக்கிறது. இருந்தாலும் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் எதிரான மதவாத அரசியல்தான் அது என்பதற்கு இந்துத்துவவாதிகள் ஒவ்வொரு நாளும் உதிர்க்கிற சொற்களும், கொலை உள்ளிட்ட வன்முறைகளும் சாட்சி சொல்லிக்கொண்டுதானே இருக்கின்றன?

சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளில் தாங்களே ஈடுபடுவது, நேரடியாகப் பங்கேற்காவிட்டாலும் அப்படிப்பட்ட தாக்குதல்கள் தேவைதான் என்று ஆதரவாக இருப்பது, குறைந்தது அத்துமீறல்களைக் கண்டுகொள்ளாமல் விடுவது என்று அந்த மனநிலை வளர்ந்ததன் இதர பின்னணிகள், எதிர்வினையாக வந்த சிறுபான்மையினர் அமைப்புகளைச் சேர்ந்தோர் சிலரது பேச்சுகளும் செயல்களும் ஒட்டுமொத்த மதவெறிக் களத்துக்கு உரம் சேர்த்த நிலைமைகள், மதச்சார்பின்மை பற்றிய கொச்சையான புரிதல்கள், இவற்றை எதிர்கொள்வதில் மதச்சார்பற்ற சக்திகளின் போதாமைகள் என்று விரிவாகப் பேசியாக வேண்டும்.

அடுத்த கட்டுரையில் இவற்றைப் பற்றிச் சுருக்கமாகப் பேசி இப்போதைக்கு நிறைவு செய்வோம்.

சாமானிய மக்களுக்கு ‘மதம் பிடித்தது’ எப்படி?

சென்னை - வேலூர் இடையே முன்பதிவில்லாத ரயில்!

3 நிமிட வாசிப்பு

சென்னை - வேலூர் இடையே முன்பதிவில்லாத ரயில்!

ஆக்கிரமிப்புகளை இடிக்கக் கூடாது: சென்னை மாநகராட்சி!

4 நிமிட வாசிப்பு

ஆக்கிரமிப்புகளை இடிக்கக் கூடாது: சென்னை மாநகராட்சி!

கோவிட் காலத்தில் 81% அதிகரித்த தங்க நகைக்கடன்!

6 நிமிட வாசிப்பு

கோவிட் காலத்தில் 81% அதிகரித்த தங்க நகைக்கடன்!

வியாழன் 11 ஏப் 2019