மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 ஏப் 2019

மக்களவைத் தேர்தல்: முதற்கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்!

மக்களவைத் தேர்தல்: முதற்கட்ட வாக்குப்பதிவு  தொடக்கம்!

17ஆவது மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 11) நடைபெறவுள்ளது.

மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பைத் தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் 10ஆம் தேதி வெளியிட்டது. அதன்படி முதற்கட்டமாக ஆந்திரப் பிரதேசம் - 25, அருணாசலப் பிரதேசம் - 2, பிகார் - 4, சத்தீஸ்கர் - 1, ஜம்மு காஷ்மீர் - 2, மகாராஷ்டிரம் - 7, மணிப்பூர் - 1, மேகாலயா - 2, மிசோரம் - 1, நாகாலாந்து - 1, அசாம் - 5, ஒடிசா - 4, சிக்கிம் - 1, தெலங்கானா - 17, திரிபுரா - 1, உத்தரப் பிரதேசம் - 8, உத்தராகண்ட் - 5, மேற்கு வங்காளம் - 2, அந்தமான் நிக்கோபார் - 1, லட்சத்தீவு - 1 என மொத்தம் 91 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இந்தத் தொகுதிகளுக்கு மொத்தம் 1,266 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதனுடன் ஆந்திரம், சிக்கிம், அருணாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாகவும், ஒடிசாவில் முதற்கட்டமாகச் சட்டமன்றத் தேர்தலும் நடைபெறவிருக்கிறது. இதில் அதிகபட்சமாக ஆந்திராவில் 25 மக்களவைத் தொகுதிகளுக்கும் 175 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக 45,920 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு 3.93 கோடி வாக்காளர்கள் உள்ளனர். தெலங்கானாவைப் பொறுத்தவரை 34,604 வாக்குச்சாவடிகள் உள்ளன. 2.96 கோடி பேர் வாக்களிக்கவுள்ளனர்.

அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட தேர்தல் திருவிழா இன்று தொடங்கவிருக்கும் நிலையில் அதற்காகப் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 91 பகுதிகளில் 37 பகுதிகள் பதற்றமானவை என்பதால் அங்கு போலீஸ் பாதுகாப்புடன், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணி முழுவீச்சில் நடைபெற்றது. போதுமான வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தேர்தலை அமைதியாக, நியாயமாக நடைபெறுவதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.

மேற்கண்ட மாநிலங்களில் நடைபெறும் தேர்தலை முன்னிட்டு நேற்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரங்கள் ஓய்ந்தன. சமூக வலைதளங்களிலும் மாலை 6 மணியுடன் பிரச்சாரத்துக்குத் தடை விதிக்கப்பட்டது. கருத்துக்கணிப்புகள் வெளியிடுவதற்கும் நேற்று மாலையுடன் கால அவகாசம் முடிவடைந்தது.

இதற்கிடையே முதற்கட்ட தேர்தலில் போட்டியிடும் பணக்கார மற்றும் ஏழ்மையான வேட்பாளர்கள் குறித்த விவரங்களை ஜனநாயக சீர்திருத்தச் சங்கம் வெளியிட்டுள்ளது. இதில், தெலங்கானா மாநிலத்தின் செவ்வெல்லா தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கொண்ட விஸ்வேஸ்வர் ரெட்டி பணக்கார வேட்பாளர் என தெரியவந்துள்ளது. இவரின் சொத்து மதிப்பு 895 கோடி ரூபாயாகும். இவருக்கு அடுத்ததாக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் விஜயவாடா தொகுதி வேட்பாளரான பிரசாத்.வி.பொட்லூரி உள்ளார்.

சென்னை - வேலூர் இடையே முன்பதிவில்லாத ரயில்!

3 நிமிட வாசிப்பு

சென்னை - வேலூர் இடையே முன்பதிவில்லாத ரயில்!

ஆக்கிரமிப்புகளை இடிக்கக் கூடாது: சென்னை மாநகராட்சி!

4 நிமிட வாசிப்பு

ஆக்கிரமிப்புகளை இடிக்கக் கூடாது: சென்னை மாநகராட்சி!

கோவிட் காலத்தில் 81% அதிகரித்த தங்க நகைக்கடன்!

6 நிமிட வாசிப்பு

கோவிட் காலத்தில் 81% அதிகரித்த தங்க நகைக்கடன்!

வியாழன் 11 ஏப் 2019